உலகப் புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. இதில் கலந்துகொள்ள அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 17 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தாக்கத்தை கட்டுபடுத்தும் பொருட்டு முதல் நாள் மற்றும் கடைசி இரு நாட்களில் திருவிழாவில் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 26 ஆம் தேதி பத்தாம் திருவிழா நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வர யாருக்கும் அனுமதி இல்லை என்றும், பத்தாம் திருவிழா வன்று கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரம் இந்த வருடம் கோவில் வளாகத்திலேயே நடத்தப்பட உள்ளது., எனவே கடற்கரை பகுதிகளில் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும் தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் பிரபல தொலைக்காட்சி மற்றும் You-Tubeலும் நேரடியாக ஒளிப்பரப்படும். இதனை மீறி வரும் பக்தர்கள் சோதனை சாவடிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆகவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என்றும் விரதமிருந்த பக்தர்கள் தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பை கழட்டி கொள்ளுமாறும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.