வேற்று மதத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து அவருடன் ஓட்டம் பிடித்த 17 வயது சிறுமியை மொட்டையடித்து கொடுமைப்படுத்திய பெற்றோரை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதல் திருமணத்திற்கும், கலப்புத் திருமணத்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பெரும்பாலான நாடுகளிலும் எதிர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. வேற்று மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தால் சொந்த மகள் என்று கூட பார்க்காமல் பெற்றோர் கொலை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கு சமமான ஒரு கொடுமை நாகரீகத்தில் எவ்வளவோ முன்னேறிய பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ளது. இங்குள்ள பெசன்கான் என்ற நகரத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 17 வயதான ஒரு சிறுமியும், 20 வயதான ஒரு வாலிபரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். அந்த சிறுமி முஸ்லிம் மதத்தையும், வாலிபர் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது காதல் இரு வீட்டினருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரது பெற்றோர்களும் அவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதன் பின்னர் சில நாட்கள் கழித்து இருவரும் மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
ஆனால் அந்த சிறுமியை ஏற்க அவரது பெற்றோர் தயாராக இல்லை. அவரை வீட்டில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தினர். அந்த சிறுமியின் தலையை மொட்டை அடித்தனர். இது குறித்து அறிந்த அந்த வாலிபரின் பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த சிறுமிக்கு முதுகெலும்பு உட்பட உடலில் பல பகுதியில் காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த பெசன்கான் நீதிமன்றம், சிறுமியின் குடும்பத்தினரை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது. அந்த சிறுமியை பிரான்சில் உள்ள சமூக நல அமைப்புகள் பராமரிக்கும் என்றும், மேஜர் ஆனவுடன் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ் அமைச்சர் மார்லெனா ஷியாப்பா கூறினார்.