கழிவு நீரை வெளியே விடுவது தொடர்பாக பக்கத்து வீட்டினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 24 வயதான இளம்பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அவரது தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. கேரள மாநிலம் கொல்லம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள உளியகோவில் பகுதியை சேர்ந்தவர் லீனா. இவரது மகள் அபிராமி (24). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் உமேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். உமேஷ் பாபுவின் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் லீனாவின் வீட்டுக்கு அருகே சென்று கொண்டிருந்தது. இதுதொடர்பாக இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்து அபிராமி கொல்லம் கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் இரு வீட்டினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கழிவு நீரை வீட்டுக்கு வெளியே விடக்கூடாது என்று உமேஷ் பாபுவிடம் போலீசார் கூறினார். அதற்கு அவரும் சம்மதித்தார். இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் எழுதிக்கொடுத்தார். தன்னை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த அபிராமியின் குடும்பத்தினர் மீது உமேஷ் பாபுவுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு கத்தியுடன் லீனாவின் வீட்டுக்கு சென்ற உமேஷ் பாபு, லீனா மற்றும் அபிராமியுடன் தகராறில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் திடீரென கத்தியை எடுத்த உமேஷ் பாபு, அபிராமியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதைத் தடுக்க வந்த லீனாவையும் அவர் கத்தியால் குத்தினார். இந்த சமயத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உமேஷ் பாபுவிடமிருந்து கத்தி தவறி கீழே விழுந்தது.
கத்தியின் மேல் அவர் விழுந்தார். இதில் உமேஷ் பாபுவுக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த கொல்லம் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த 3 பேரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அபிராமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். லீனா மற்றும் உமேஷ் பாபுவுக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.