உபியில் தொடரும் கொடூரம்.. 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை...

by Nishanth, Nov 8, 2020, 19:15 PM IST

போலீஸ் என்ன அதிரடி நடவடிக்கை எடுத்தும் உ பி யில் எந்த பலனும் ஏற்படுவதாக தெரியவில்லை. 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் இப்போது அரங்கேறி உள்ளது. இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலம் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. பச்சிளம் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இங்குள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னரும் உத்திர பிரதேசத்தில் பலாத்கார சம்பவங்கள் குறைவதாக தெரியவில்லை.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார். போலீசாரும் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை என்பதற்கு உதாரணமாக இப்போது மீண்டும் ஒரு 6 வயது சிறுமி கடத்தி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள பிலிபித் என்ற கிராமத்தை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி தான் தற்போது கடத்தி பலாத்காரம் செய்து கொடூரமான கொல்லப்பட்டுள்ளார். இந்த சிறுமியின் தந்தை அந்த கிராமத்திலுள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் நடத்தினார். அந்த பூஜைக்கு தன்னுடைய மகளையும் இவர் அழைத்துச் சென்றிருந்தார். இந்நிலையில் கோவிலில் வைத்து திடீரென அந்த சிறுமியை காணவில்லை.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் அங்குள்ள கரும்பு தோட்டத்தில் குழந்தை கொல்லப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் உடல் நிர்வாணமான நிலையில் கிடந்தது. வாயில் ஒரு கரும்புத் துண்டு திணிக்கப்பட்டிருந்தது. பலாத்காரம் செய்து மூச்சைத் திணற வைத்து அந்த சிறுமியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி அந்த கிராமத்தை சேர்ந்தவர் தான் என்றும், விரைவில் கைது செய்து விடுவோம் என்றும் எஸ்பி ஜெயபிரகாஷ் சிங் கூறியுள்ளார்.

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்