தமிழகத்தை உலுக்கிய அறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனதாக ஏம்பல் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறை ஈடுபட்ட தேடுதல் பணியில் முற்புதரில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டாள்.
தொடர்ந்து, சிறுமி உடல் உடற்கூறு ஆய்வு செய்ததில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்ற ராஜா(27) என்பவர் சிக்கினார். இதனையடுத்து, ராஜா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைந்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியா 6 மாதத்தில் தீர்ப்பு அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு மரண தண்டனையும், சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக மற்றோரு மரண தண்டனையும், தடயத்தை அளிக்க முயன்றதற்காக 7 வருட சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், குழந்தையை கடத்தியதாக 7 வருட சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும், வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்காக ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.