சேலத்தில் மகளிர் சுய உதவி குழுவினரிடம் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி நூதன முறையில் மோசடி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சதுரங்கவேட்டை சினிமா படத்தில் வருவது போல ஆசையை தூண்டி மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் பெருந்தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த வாசு தனது நண்பர் டில்லி என்பவருடன் சேர்ந்து கிராமப் பகுதிகளுக்கு சென்று, பிரபல நிதி நிறுவனத்தின் பெயரை சொல்லி, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு குறைந்த வட்டியில் அதிக கடன் பெற்றுத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கடன் பெறுவதற்கு , முன்கூட்டியே பதிவுக் கட்டணமாக ரூ 2500 செலுத்தினாள், மூன்று மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும் என ஆசை கட்டியுள்ளனர். டில்லி என்பவரது பெயரில் உள்ள வங்கி கணக்கு எண்ணை கொடுத்து, அந்த கணக்கில் 2500 ரூபாய் செலுத்தினால் 3 மணி நேரத்தில் கடன் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி என்ற கிராமத்தில் மட்டும் 25 பேர் தலா 2500 வீதம் 62,500 ரூபாய் செலுத்தியுள்ளனர். பணம் செலுத்தி இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் கடன் கிடைக்கவில்லை. இதனையடுத்து வாசுவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டதில் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். பண மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, தாங்கள் செலுத்திய முன்பணத்தை மீட்டுத் தர வேண்டும் என அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.