மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார். 32வயதான இவர், பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஆரத்தி என்ற பெண்ணுடன் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் திருமணமானது. அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு இருவரும் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் நார்த் ஆர்லிங்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஆரத்தி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் தான் அந்த துக்க சம்பவம் நடந்தது. கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு பாலாஜி, ஆரத்தி தம்பதியரின் மகள் வீட்டின் பால்கனியில் நின்று அழுதுகொண்டு இருந்திருக்கிறாள்.
இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.
போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இது தொடர்பாக அவரது தந்தை பரத் ருத்ரவார் பேசுகையில், ``என் மருமகள் 7 மாத கர்ப்பிணி.
நாங்கள் அமெரிக்கா சென்று அவர்களுடன் இருந்து விட்டு வந்தோம். மீண்டும் அமெரிக்காவுக்கு அவர்களை பார்க்கச்செல்ல திட்டமிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் இப்படி ஒரு துயரம் நடந்து விட்டது. இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை.
அவர்கள் மகிழ்ச்சியான தம்பதியராகத்தான் இருந்து வந்தார்கள். எல்லா சட்டநடைமுறைகளும் முடிந்து அவர்களது உடல்களை எடுத்து வர 10 நாட்கள் வரை ஆகலாம். எனது பேத்தி, எனது மகனின் நண்பர் வீட்டில் இருக்கிறாள் என்றார். கணவன், மனைவி இருவருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஆரத்தியை, பாலாஜி கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது.