12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய பிரதேச சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றியது.
பதின்ம வயதை அடையாத, வயதுக்கு வராத சிறுமிகளை, பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் மத்திய பிரதேசத்தில் பல இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது,
இதை கண்டித்து பல போராட்டங்கள் வெடித்தன.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தால் இதுபோன்ற சம்பவங்களை செய்பவர்கள் பெருகிவிடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, இன்று சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான மத்தியபிரதேச அரசு, 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர், இவர் பல அதிரடிகளுக்கு பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக அண்மையில் திருமணம் செய்யாமல் பெண்களுடன் ஊர் சுற்றும் காதல் மன்னன்களை பிடிக்க ஆன்டி-மஜ்னு என்ற பெயரில் தனிப்படை அமைத்தார்.
குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டிய வழக்கமான கோப்புகளை கிடப்பில் போடும் அரசு அதிகாரிகள் தலைகீழாக தொங்க விடப்படுவார்கள் என மிரட்டல் விடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 விவசாயிகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டார்கள், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என உத்தரவிட்டார்.
தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைய தூக்குதண்டனை சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
இதுபோன்ற சட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தினால்தான் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும் என்றும், தமிழ்நாட்டிலும் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் சமூக நல ஆர்வலர்கள பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.