அர்ஜென்டினாவில் நிறுவப்பட்டிருந்த கால்பந்து வீரர் மெஸ்சியின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ப்யூனஸ் அயர்ஸ் அருகே ப்யூரட்டா மெரோ என்ற பகுதியில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோ மெஸ்சிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அடையாளம் தெரியாத சிலர் உடைத்துப் போட்டு விட்டு சென்று விட்டனர். கடந்த ஜனவரி மாதம் இடுப்பு பகுதியை ஏற்கனவே சிலர் உடைத்தனர். சிலை புனரமைத்து மீண்டும் நிர்மாணித்துள்ள நிலையில் இரண்டாவது முறையாக மெஸ்சி சிலை உடைக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு கோபா- அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், சிலி அணியிடம் அர்ஜென்டினா அணி தோல்வி கண்டதும், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்சி அறிவித்தார். அவரை சமாதானப்படுத்தும் வகையில் இந்த சிலை நிர்மானிக்கப்பட்டது. மீண்டும் சர்வதேச கால்பந்து போட்டிக்கும் திரும்பியுள்ள மெஸ்சி, தனித்திறமையால் 2018ம் ஆண்டு, ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அர்ஜென்டினா அணியை தகுதி பெறச் செய்தார்.
கால்பந்து ஜாம்பவான் மரடோனா, பார்முலா ஒன் வீரர் ஜுவான் மனுவேல் பாங்கியோ, டென்னிஸ் வீராங்கனை கேப்ரியல் சபாடினி ஆகியோருக்கும் இதே பகுதியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.