அமெரிக்காவில் ஓக்லஹாமா மாநிலத்தில், சாலையில் கிடந்த விரியன் பாம்பை அகற்ற முயன்றவரை அந்தப் பாம்பு கடித்தது. மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓக்லஹாமாவில் டல்ஸாவை சேர்ந்தவர் பாரி லெஸ்டர் (வயது 57). கடந்த ஞாயிறன்று லெஸ்டரின் பிறந்தநாளானதால், அவரும் அவரது மனைவி ராபர்டாவும் கீஸ்டோன் ஏரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் விரியன் பாம்பு ஒன்று கிடந்துள்ளது. பாரி லெஸ்டர் ஏற்கனவே பாம்புகளை கையாண்ட பழக்கம் உள்ளவராதலால், பாம்பினை சாலையை விட்டு அகற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது பாம்பு அவரை இடக்கையில் கடித்ததாகவும், உடனே லெஸ்டர் அதை வலக்கைக்கு மாற்றியபோது அங்கும் பாம்பு கடித்ததாகவும் லெஸ்டரின் மனைவி ராபர்டா கூறியுள்ளார்.
லெஸ்டர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் கூறியதால், அவர்கள் ஆம்புலன்ஸில் டெல்ஸாவிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஆனால், அங்கு பாரி லெஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாம்பு கடித்ததாலும், அவருக்கு இருந்து வந்த இருதய பிரச்னையினாலும் லெஸ்டர் உயிரிழந்ததாக செய்தி குறிப்பு கூறுகிறது. "பாம்புகளோடு விளையாட வேண்டாம். அவற்றை கண்டால் விலகி சென்று விடுங்கள்," என்று ராபர்டா கோரிக்கை விடுத்துள்ளார்.