உத்திர பிரதேசத்தில் திருமணத்தின் போது நடந்த கொண்டாட்டத்தில் துப்பாக்கி வெடித்ததில் மணமகன் பலியானார். கடந்த ஞாயிறன்று இரவு இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.
சுனில் வர்மா (வயது 25) என்பவருக்கு திருமணம் நடந்தது. மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூடியிருந்த விழாவில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அனைவரும் திடுக்கிட்டு பார்த்தபோது, துப்பாக்கி மறுபடியும் வெடித்தது. இரண்டாவதாக வெடித்த குண்டு, மணமகனின் மீது பாய்ந்தது. மணமகன் சுனில் வர்மா நிலைகுலைந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணத்தின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளில், ஆரஞ்சு நிற உடை அணிந்த ஒருவரின் கையிலிருந்த துப்பாக்கி வெடிப்பதும், அதை தொடர்ந்து மணமகன் கைகளால் மார்பை பிடித்தபடி விழுவதும் பதிவாகியுள்ளது. உற்சாகமாக நடந்து கொண்டிருந்த திருமணவிழா, சோகத்தோடு முடிந்துள்ளது.
திருமணங்களில் இதுபோன்று துப்பாக்கி வெடிப்பது வழக்கமாகி வருகிறது. கொண்டாட்டம் கருதி செய்யப்படும் இதுபோன்ற செயல்கள், உயிரிழப்புக்கு காரணமாக மாறுகின்றன. இச்சம்பவம் நடந்த அதே நாளில், அருகிலுள்ள அஹமதாபாத் மாவட்டத்தில், நடந்த திருமணம் ஒன்றில் மணமகனின் நெருங்கிய உறவுக்கார 20 வயது இளைஞன் ஒருவன் இதுபோன்று துப்பாக்கி வெடித்ததில் பலியாகியுள்ளான். கடந்த பிப்ரவரி மாதம், புதுடெல்லியில் திருமணத்தின்போது மணமகன் இதேபோன்று உயிரிழந்துள்ளார்.
சுனில் வர்மாவின் உயிரிழப்புக்கு காரணமான ராமச்சந்திரா என்பவர், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். செவ்வாய் அன்று காவல்துறையினர் அவரை கைது செய்து, உயிரிழப்பு நேரிட காரணமான உரிமம் பெற்ற துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.