காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு காப்பகத்தில் 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமாக இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சிறுமியிடம் விசாரித்த போது அவருடைய உறவினர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் தகாத முறையில் உறவு கொண்டதாக கூறினார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தலைவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சிறுமிக்கு 14 வயது மட்டுமே நடக்கிறது. இந்த வயதில் அவர் குழந்தை பெற்றால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறுமி பாதிப்புக்கு ஆளாவார். எனவே இந்த 18 வார கருவை கலைக்க அரசு மருத்துவமனை மருத்துவருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
சிறுமி, சிறுமியின் தாயார், மற்றும் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் வினிதா ஆகியோர் நீதிபதி டி.ராஜா முன் ஆஜரானார்கள். சிறுமி வயிற்றில் 18 வார கரு இருப்பதாக மருத்துவர் வினிதா நீதிபதி முன்பு பதிவு செய்தார். கருவினை கலைக்க சிறுமியும், சிறுமியின் தாயும் சம்மதம் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி டி.ராஜா சிறுமியின் வயிற்றில் இருக்கும் 18 வார கருவை கலைக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.