ரயில்களில், பெண்கள் பெட்டியை புதிய நிறத்தில் மாற்றவும், இதில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் ரயில்வே நிர்வாகம் பரிந்தரை செய்துள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ரயில்வே வாரியத் தலைவர் அஷ்வனி லோகானி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, ஆய்விற்கு பிறகு பல்வேறு மாற்றங்கள், பரிந்துரைகளுடன் அறிக்கையை குழு சமர்ப்பித்தது. அதன்படி, ரயில்களில் பெண்களுக்கான பெட்டி கடைசியில் இருப்பதால் அவசரக் காலங்களில் உடனடியாக உதவி கிடைக்காமல் போகிறது. இதனால், பெண்கள் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற வேண்டும். பெண்கள் பெட்டிகளில் மட்டும், அவர்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களை அமைக்கலாம். பெண்கள் பெட்டியை எளிதில் அடையாளம் காணும் வகையில் தனித்துவமான பெயின்ட் நிறத்தை மாற்றலாம். நீண்டதூர மற்றும் புறநகர் ரயில்கள் என அனைத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பரிந்துரைகள் தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கும்படி அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட பிறகு, பரிந்துரைகள் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.