இந்தியாவில் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா (வயது 32). எஞ்ஜினியரான இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி, ஸ்ரீனிவாஸும் அவரது நண்பர் அலோக் மடசானி என்பவரும் கான்சாஸில் ஒலாத்தே நகரிலுள்ள குடிமையம் ஒன்றிற்கு சென்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஆடம் புரிண்டன் (வயது 52) என்ற அமெரிக்கர் ஸ்ரீனிவாஸை பார்த்து, "என் நாட்டை விட்டு ஓடிப்போய்விடு" என்று கத்தியுள்ளார். தொடர்ந்து ஆடம் துப்பாக்கியால் சுட்டதில் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவும், அவரது நண்பரான அலோக் மடசானியும் பலத்த காயமுற்றனர். அருகில் நின்றிருந்த இன்னொரு அமெரிக்கரான இயான் கிரிலாட்டும் காயமுற்றார். இதில் ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக மரணமடைந்தார்.
இனவெறி கொண்டு துப்பாக்கி சூடு நடத்திய ஆடம் புரிண்டன், அமெரிக்க கடற்படையின் முன்னாள் வீரராவார். இவ்வழக்கை விசாரித்த கான்சாஸ் பெடரல் நீதிமன்றம், ஸ்ரீனிவாஸை கொலை செய்ததற்காக ஆடம் புரிண்டனுக்கு ஆயுள் சிறை வாசமும், மற்ற இருவரையும் சுட்டதற்காக 165 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது.
கொல்லப்பட்ட ஸ்ரீனிவாஸின் மனைவி சுனயானா டுமலா, "இந்தத் தீர்ப்பின் மூலம் என் கணவர் திரும்ப கிடைக்க மாட்டார். ஆனாலும், வெறுப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்ற உறுதியான செய்தியை இந்தத் தீர்ப்பு கூறியுள்ளது. ஆகவே, இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்," என்று கூறியுள்ளார்.