ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற பொருட்காட்சியில், திடீரென ராட்டினம் கழன்று விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆந்திரபிரதேசம் மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. இங்கு, பொழுது போக்கிற்காக ராட்டினம், சறுக்கு மரம், போன்ற விளையாட்டு பொருட்களும் வைத்திருந்தனர். பள்ளிகள் முடிந்து விடுமுறை அளித்துள்ளதால், பெற்றோர் தங்களின் குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்து வந்திருந்தனர். குறிப்பாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பொருட்காட்சிக்கு வந்திருந்தானர்.
இந்நிலையில், பொருட்காட்சியில் இடம்பெற்றிருந்த மின்சார ராட்டினத்தில் விளையாட குழந்தைகளுடன் ஏராளமானோர் அதில் ஏறினர். ராட்டினம் சுற்ற ஆரம்பித்த சில நிமிடங்களில் திடீரென ஒரு பெட்டி கழன்று விழுந்தது. இதில், அம்ருதா என்ற 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் அனந்தப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள் ராட்டின ஆப்பரேட்டரை தாக்கினர். மேலும், ராட்டினர் சுற்ற ஆரம்பித்தபோது அதன் போல்ட் கழன்றி இருந்ததாகவும், இதுகுறித்து ராட்டின ஆப்பரேட்டரிடம் புகார் கூறியும் அவர் மதுபோதையில் இருந்ததால் கண்டுக்கொள்ளவில்லை என்றும் சம்பவத்தின்போது இருந்த பொது மக்கள் குற்றம்சாட்டினர்.
இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட ராட்டின ஆப்பரேட்டரை பொது மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com