அமெரிக்காவில் தன் குழந்தைகளையும், சிநேகிதியின் குழந்தைகளையும் சுட்டுக்கொன்றவன், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார்.
குற்றவாளியுடனான மோதலில் காவல் அதிகாரி ஒருவர் படுகாயமுற்றுள்ளார்.
கடந்த ஞாயிறன்று இரவு அமெரிக்காவில் மத்திய ஃப்ளோரிடா பகுதியில், யூனிவர்சல் ஓர்லேண்டோ தீம் பார்க் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் கொடுத்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்றனர்.
புகார் கொடுத்த பெண், தன் ஆண் சிநேகிதர் தன்னை தாக்கியதாக கூறினார். அந்தப் பெண் வெளியே வந்த நிலையில், காவல்துறையினர் புகாருக்குள்ளான காரி லிண்ட்சே என்பவனை அணுக முயன்றனர். ஆனால், தன்னுடன் இருந்த நான்கு குழந்தைகளை அவன் பிணைகைதிகளாக வைத்துக் கொண்டு, காவல்துறையினர் மீது துப்பாக்கியால் சுட்டான். பதிலுக்கு காவல்துறையினரும் துப்பாக்கியை கையாண்டனர். இந்த மோதலில் கெவின் வாலென்ஸியா என்ற காவல் அதிகாரி படுகாயமுற்றார்.
காவல்துறையினர், தொடர்ந்து அந்த மனிதனுடன் தொடர்பு கொண்டு வந்தனர். இறுதியாக திங்கள் இரவு உள்ளூர் நேரப்படி 8:30 மணி முதல் 9 மணி வரை அவனுடன் பேசினர். இந்நிலையில் காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்தபோது, லிண்ட்சே, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு இறந்திருப்பது தெரிய வந்தது, பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்த 1, 6, 10 மற்றும் 11 வயது குழந்தைகளையும் சுட்டுக் கொன்றிருந்தான்.
அதில் இரு குழந்தைகள் அவனுடைய குழந்தைகள் என்பதும், இரு குழந்தைகள் அவன் பெண் சிநேகிதியின் குழந்தைகள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது, காரி லிண்ட்சே மீது ஏற்கனவே பல குற்றவழக்குகள் இருப்பதாகவும், மோதலில் காயமுற்ற காவல் அதிகாரி சிகிச்சையில் இருப்பதாகவும் காவல்துறையின் தலைமை அதிகாரி ஜாண் மினா தெரிவித்துள்ளார்.