சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. இவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கொளத்தூர் நகைக் கடை ஒன்றில் நகைகளை கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்களை பிடிப்பதற்காக சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உள்பட 3 தனிப்படை போலீசார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானுக்கு சென்றனர். அப்போது, கொள்ளையர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது, கொள்ளையன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் பெரிய பாண்டியன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில், பெரிய பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் காவல் துறையினரிடம் மட்டுமின்றி பொது மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட பெரிய பாண்டியனின் உடல் தமிழகம் கொண்டு வர அரசு ஏற்பாடுகளை செய்தது. அதன்படி, இன்று காலை 8.20 மணியளவில் காவல் ஆய்வாளர் உடல் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு சென்னை வந்தடைந்தது.
விமான நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, போலீஸ் டிஜிபி கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன் ஜெயராம், சேஷசாயி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும், கையில் கருப்புப்பட்டை அணிந்த வண்ணம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதற்காக சென்னை விமான நிலையத்தில் 5வது வாசல் அருகில் சிறிய மேடை அமைத்து அதில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் படம் பலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது, அதன் அருகில் 21 துப்பாக்கிகளை கையில் ஏந்தியபடி 21 போலீசார் அணிவகுத்த மரியாதை செலுத்தினர்.
இன்று மாலை 6 மணியளவில் விமானம் மூலம் மதுரைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சாலைப்புதூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது பூர்வீக வீட்டில் பெரியபாண்டியனின் மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர், அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.