சென்னையில் ஒரே இரவில், கத்தியைக் காட்டி மிரட்டி 7 நபர்களிடம் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்குநாள் திருட்டு,வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க காவல்துறையினர் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். எனினும், குற்றச்செயல்கள் குறைந்தபாடில்லை.
நேற்றிரவு மட்டும் சென்னை பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் மற்றும் மேடவாக்கம் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், அந்த வழியாக சென்று கொண்டிருந்த மூன்று பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி மூன்று செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
துரைப்பாக்கம் மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற 3 நபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் தங்கச் சங்கிலி ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
கோயம்பேடு பகுதியில் 2 பேரிடம் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. இதனால் அச்சம் அடைந்த மாநகர மக்கள், கொள்ளையர்களை பிடிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.