பழனியில் திருமணம் நிச்சியிக்கப்பட்ட ஆசிரியையை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் பகவதி. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு பவித்ரா (24), மயில், அனிதா என்ற மகள்கள் உள்ளனர்.
பவித்ரா, பழனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
பவித்ராவிற்கு ஆகஸ்டு மாதம் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பவித்ரா நேற்று கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். அப்போது, ஆர்.எப் சாலையில் பவித்ரா வாலிபர் ஒருவரை சந்தித்துள்ளார். பின்பு, இருவரும் ஆட்டோவில் ஏறி அடிவாரம் நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
ஆட்டோவில் ஏறியது முதல் பவித்ராவுக்கும் அந்த வாலிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது, ஆட்டோவில் இருந்த வாலிபர் பவித்ராவின் கழுத்தை அறுத்துவிட்டு ஆட்டோவில் இருந்து குதித்து தப்பினான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுனர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியபோது, பவித்ராவின் உறவினர் மாயவன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. மாயவனை கண்டுபிடித்தால் தான் பவித்ராவின் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.