சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலம் மதிப்பீடு பணிகளை படம் எடுக்க சென்ற ஹெலிகேம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுபிடிப்பபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 277 கி.மீ தொலைவில் சாலை அமையும் வழித்தடத்தில் நிலைம் கையகப்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், 122 கி.மீ., தொலைவில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப்படுத்த அளவீடு செய்தல் பணி நடந்து முடிந்தது. இதைதொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக அளவீடு செய்த நிலத்தை ஜிபிஎஸ் கருவி மற்றும் ஹெலிகேம் உதவியுடன் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், செங்கம் தாலுகா நரசிங்கநல்லூரி மலை கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஹெலிகேம் உதவியுடன் நிலம் மதிப்பீடு செய்யும் பணி நேற்று முன்தினம் காலை தொடங்கியது. அப்போது, ஹெலிகேமை மேலே பறக்கவிட்டு படம் பிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென ஹெலிகேம்மின் கட்டுப்பாட்டை அதிகாரிகள் இழந்தனர். ரிமோட் மூலம் முயற்சித்தும் ஹெலிகேம் திரும்பவில்லை. இதன் பின்னர், ªஹிகேம் மாயமானது தெரியவந்ததை அடுத்து, போலீசார் ஹெலிகேமை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஊர் முழுக்க தேடியும் ஹெலிகேம் கிடைக்கவில்லை. இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால், ஹெலிகேமை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று கிராம மக்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.