மின்சார ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பரங்கிமலை ரயில் நிலையத்தில் 4-வது தண்டவாளத்தை மாற்றி அமைக்க ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையத்தில், கடந்த மாதம் 24ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக கடந்த 23ஆம் தேதியும் அதே இடத்தில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, ரயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், பரங்கிமலை ரயில் நிலைய 4-வது நடைமேடை அருகே உள்ள தடுப்பு சுவரை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்த மாதம் 30ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
அப்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்திய பொதுமக்கள், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடை வழியாக தென்மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் செல்லும்போது இடையூறாக உள்ள தடுப்பு சுவர்களையும் அகற்றும்படி கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து கடந்த 6ஆம் தேதி பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார், 4-வது நடைமேடையில் இடையூறாக இருந்த தடுப்பு சுவரை சுமார் 30 அடி நீளத்துக்கு இடித்து அகற்றினர்.
ஆனால் 5 பேர் உயிரை பலி வாங்கி பரங்கிமலை ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் உள்ள தடுப்பு சுவரை அகற்றுவது சாத்தியம் இல்லை என்பதால், அதற்கு பதிலாக நடைமேடையின் முன்புறம் தண்டவாளம் அருகே உள்ள சுவரை உடைத்து, 4-வது தண்டவாளத்தை சில அடி தூரம் வரை தள்ளி அமைத்தால் இதுபோல் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என அதிகாரிகள் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.
இதற்காக 4-வது தண்டவாளம் ஓரம் உள்ள ஜல்லி கற்கள் அகற்றப்பட்டு நடைமேடையில் கொட்டப்பட்டு உள்ளது. விரைவில் 4-வது தண்டவாளம் மாற்றி அமைக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.