மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக பரீசிலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல், கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, இச்சட்டம் கொண்டுவரப்பட்டுத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின்படி அனைத்து வீடு மற்றும் அனைத்து கட்டடங்களும் கட்டயாமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். தேவைப்படுவோர்க்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த உத்தரவை யாரும் முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி வழக்கறிஞர் தேன்ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் மீறும் கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் , நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து எட்டு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.