எழும்பூர் அருகே தனியார் மென்பொருள் நிறுவன ஹெச்ஆரை முன்னாள் ஊழியர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் பெருமாள் கோயிலில் சேர்ந்தவர் அஸ்வின். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஹெச்ஆராக கடந்த இரண்டு வருடமாக பணியாற்றி வருகிறார்.
இதே கம்பெனியில் கடந்த 11 வருடமாக ப்ராஜெக்ட் மேனஜராக பணிபுரிந்தவர் முத்துகுமார். சென்னை பெரியார் நகரை வசித்து வரும் இவர், மூன்று மாதத்துக்கு ஒரு முறை நிறுவனம் சார்பில் வெளிநாட்டிற்கு சென்று அங்குள்ள பணிகளை பார்த்து வந்தார்.
முத்துகுமாரின் பணி சரியில்லை என்றுக் கூறி மென்பொருள் நிறுவனம் அவரை வேலையைவிட்டு அனுப்பியுள்ளது. மேலும் முத்துக்குமார் பார்த்து வந்த பொறுப்புகள் அனைத்தும் அஸ்வினுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார், அஸ்வினுடைய வீட்டிற்கு சென்று இது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் அஸ்வினை தாக்கியுள்ளார். இதனை கவனித்த அஸ்வின் தாயார் முத்துகுமாரை தடுத்துள்ளார்.
அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், முத்துகுமாரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த ஹெச்ஆர் அஸ்வின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.