நெடுஞ்சாலை திட்டப் பணிகள் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான, புகார் மீதான வரைவு விசாரணை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலை பணிகள் ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
அதன்படி, சுமார் ரூ 4 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூன் மாதம் 22-ஆம் தேதி விசாரணை தொடங்கிய டிஎஸ்பி அதுதொடர்பான வரைவு அறிக்கையை இயக்குனருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.