அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு எதிராக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 17 பேரும் ஒரு வருடத்திற்கு ஜாமின் பெற முடியாது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள என்.ரமேஷ், சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார்.
12 வயதுக்கும் குறைவான சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் வகையில், புதிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியிருந்தது. கடந்த ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய சட்டப் பிரிவின் கீழ் இந்த குற்றப் பத்திரிகையில், 17 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.