விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்துக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்தநாள், ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளான இன்று கொண்டாடப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை மாநகரில் உள்ள சித்தி விநாயகர் கோயில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயில்களில் காலை முதலே, வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள விநாயகர் தலங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. புதுச்சேரி மணக்குள விநாயகர், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர், திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை உச்சிபிள்ளையார், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள முக்கூரணி பிள்ளையார், திண்டுக்கல் நன்மை தரும் 108 விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டையில், 150 கிலோ எடை கொண்ட பெரிய கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாட்டு பக்தர்கள் உச்சிபிள்ளையாரை தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியிலுள்ள கற்பக விநாயகர் திருக்கோயிலில், காலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒவ்வொரு தெருவுக்கும் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது. விநாயகரை வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு கொழுக்கட்டை, புளியோதரை, பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.