மாஸ்கோ: மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் பேருந்து ஒன்று புகுந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாயினர். மேலும், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஸ்லாவியன்ஸ்கி மெட்ரோ ரயில் நிலையம் சுரங்கத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே, வந்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து திடீரென சுரங்கப்பாதைக்குள் வேகமாக நுழைந்தது.
சுரங்கப்பாதைக்குள் சென்றிருந்தவர்கள் மீது பேருந்து எதிர்பாரா விதத்தில் மோதியதில் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த 11 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் வாகனங்கள் மூலமாக தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இதுவும் அதுபோன்ற தாக்குதலாக இருக்குமா என்ற கேள்வியை போலீசார் மறுத்துள்ளார். மேலும், மாஸ்கோ நகரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ள காரணத்தால் பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்று டிரைவர் போலீசிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.