டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்களை சந்தித்து வந்தார். இதனால், தனது பிறந்தநாள் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், அவர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்.
இந்நிலையில், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று தொடங்கி ஆறு நாள்களுக்கு இந்த சந்திப்பு நடக்கிறது.
அப்போது பேசிய ரஜினிகாந்த், “ரசிகர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கதாநாயகன் ஆசையில் சினிமாவுக்கு வரவில்லை. வில்லனாக நடித்துக்கொண்டிருந்த என்னை பைரவி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தவர் கலைஞானம். ரஜினி ஸ்டைல் என்பதை அறிமுகம் செய்தவர் இயக்குநர் மகேந்திரன்.
சில நேரங்களில் நானும் தவறுகளை செய்துள்ளேன். டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியாகும். அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது, வியூகமும் வேண்டும்.
அரசியல் எனக்கு புதிது அல்ல; அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்கிறேன். எனினும் அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.