பாரதீய ஜனதா கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநில செயலாளராக இருந்த அனில் பாரிஹர், வியாழன் அன்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயிரிழந்த அனில் பாரிஹரின் வீடு, ஜம்மு பிராந்தியத்தில் கிஸ்ட்வார் மாவட்டம், கிஸ்ட்வார் நகரத்தில் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் அனில் பாரிஹர், கிஸ்ட்வார் தொகுதியில் தேசிய சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்.
வியாழன் இரவு 8 மணியளவில் அனில் பாரிஹரும் அவரது சகோதரர் அஜீத் பாரிஹரும் தங்கள் கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்திருக்கின்றனர். அவர்கள் வருவதை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த மர்ம நபர்கள், வீட்டிற்கு அருகே இருவரையும் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துளள்னர்.
இதைத் தொடர்ந்து கிஸ்ட்வார் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் குறித்தும், இது தீவிரவாதிகளின் தாக்குதலா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அனில் பாரிஹரின் சகோதரர் அஜீத் பாரிஹர் மாநில நிதி கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார்.