தம்மை கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்று டுவிட்டரில் பதிவிட்ட மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் சட்டப் பூர்வமான அறிவிக்கை அனுப்பியுள்ளார்.
அக்டோபர் 28ம் தேதி, மத்திய அமைச்சர் ரவி பிரசாத், "கொலை குற்றம் சாட்டப்பட்ட சசி தரூர் சிவபெருமானை அவமரியாதை செய்ய முயற்சித்துள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்து தெய்வங்களை அவமரியாதை செய்துள்ளது குறித்து தம்மை சிவபக்தன் என்று சொல்லிக் கொள்ளும் ராகுல் காந்தியிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். ராகுல் காந்தி அனைத்து இந்துக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்," என்று பதிவு செய்திருந்தார். இந்த டுவிட்டர் பதிவை 1 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருந்தனர். 7,320 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 2,671 பேர் ரீடுவிட் செய்திருந்தனர்.
மத்திய அமைச்சரின் இந்தப் பதிவு, தவறானது, தீய நோக்கம் கொண்டது, அவதூறானது என்று கருத்து தெரிவித்துள்ள சசி தரூர், "இந்தியாவின் சட்ட அமைச்சரே தமக்கு அரசியல் ரீதியில் எதிரானவர் மீது தவறான விதத்தில் கொலை வழக்கை கண்டுபிடிப்பாரென்றால், நீதியும் ஜனநாயகமும் இருக்கும் என்று எப்படி நம்ப இயலும்?" என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டெல்லியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றில் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் சசி தரூரும் அவரது மனைவி சுனந்தா புஷ்கரும் தங்கியிருந்தனர். 17ம் தேதி சுனந்தாவின் உயிரிழந்த உடல் அறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அது குறித்து பெண்ணை கணவரோ அல்லது அவரது உறவினர்களோ துன்புறுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.
"மனைவி சுனந்தா புஷ்கர் இறந்தது குறித்து குற்றவியல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்படவில்லை. விசாரணை நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை இனிமேல்தான் அறிவிக்க வேண்டும். காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூட கொலை குற்றச்சாட்டு இல்லை. இந்நிலையில் சசி தரூர் குறித்து நீங்கள் கூறியுள்ள விஷயம் உள்நோக்கம் கொண்டது. அவப்பெயரை கொண்டு வரும் எண்ணத்தோடு கூறப்பட்டது. ஆகவே, இந்த அறிவிக்கை கிடைத்த 48 மணி நேரத்திற்குள் ஆதாரமற்ற, தவறான, உண்மையற்ற குற்றச்சாட்டை கூறியதற்காக நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
இல்லையெனில் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று சசி தரூருக்காக அனுப்பப்பட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. சசி தரூருக்காக சூரஜ் கிருஷ்யா அசோசியேட்ஸ் என்ற சட்ட நிறுவனம் இந்த அறிவிக்கையை அனுப்பியுள்ளது.