மும்பை: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கமலா மில்லில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக முன்னாள் டிஜிபி மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை லோயர் பரேல் சேனாபதி பாபத் மார்க் பகுதியில் கமலா மில் வளாகம் உள்ளது. இங்கு, ஓட்டல்கள், மது விடுதிகள், பிரபல தனியார் தொலைக்காட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள ஒன் அபோவ் என்ற ஒரு ஓட்டலில் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 55 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக ஒன் அபோவ் ஓட்டல் மேலாளர் 2 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, ஒன் அபோவ் ஓட்டல் அருகில் உள்ள மோஜோ பிஸ்ட்ரோ என்ற கேளிக்கை விடுதியில் கஞ்சா புகைப்பதில் இருந்து ஏற்பட்ட தீயால் தான் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, தீ விபத்திற்கு காரணமான மோஜோ பிஸ்ட்ரோ உரிமையாளர் யுக் பதக் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அப்போது, போலீசார் நடத்திய விசாரணையில் அவர் புனே முன்னாள் டிஜிபி கே.கே.பதக் என்பவரின் மகன் என்பது தெரிந்தது.
மேலும், தலைமறைவாக உள்ள சம்பந்தப்பட்ட ஓட்டலின் மற்றொரு உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இவர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.