பிடிஓ முதல் கலெக்டர் வரை கமிஷன் பஞ்... தலைவர்கள் பகிரங்க புகார்...

Advertisement

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சி மன்றத்தலைவர்களுள், பெரும்பாலானவர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு ஊராட்சி மன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பினை உருவாக்கியுள்ளனர், இந்த அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நல்லம்பள்ளி என்ற கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இக்கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், ஊராட்சிமன்றங்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஒதுக்கிய நிதியைத் தருமாறு கேட்டால், 7 முதல் பத்து சதவீதம் வரை கமிஷன் கொடுத்தால் மட்டுமே தர முடியும் என எல்லாத்துறை அரசு அதிகாரிகளும் சொல்கிறார்கள்.

கடந்த பத்து மாதங்களுக்கு மேலாகத் தருமபுரி மாவட்டத்தில் எந்த ஒரு ஊராட்சிக்கும், ஊராட்சி மன்றத்தலைவர்களால் அடிப்படை வசதியைக் கூடச் செய்து தர முடியவில்லை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குச் செய்த செலவுகளுக்குக் கூட இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை, வாக்களித்த மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தர இயலாததால் மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை, காரணம் கமிஷன் கொடுத்தால் மட்டுமே நிதி என்ற நிலமை ஏற்பட்டிருப்பதால்தான். இப்படி இருந்தால் எங்களுக்கு இந்த பதவி எதற்கு ? தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் மலர்விழி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போதுள்ள மாவட்ட ஆட்சியரும் ஊராட்சி மன்ற தலைவர்களை மதித்து நிதி ஒதுக்கி தருவதில்லை.

ஊராட்சி மன்றத்தலைலர்களின் பிரச்சனைகள், கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது, எந்த ஒரு பணியை செய்வதானாலும், மாவட்ட ஆட்சியரைக் கேட்டுத்தான் செய்யவேண்டுமென்றால், ஊராட்சி மன்ற தலைவர்கள் எதற்கு? ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டிவிட்டு சாவியையும், தலைவர் பதவியையும் மாவட்ட நிர்வாகத்திடமே ஒப்படைத்துவிட்டு வெளியேறுவதைத் தவிர வழியில்லை என்றார்.

கடந்த மூன்றாண்டுகளில் மக்களின் பணத்தை கொள்ளையடித்தது போதாதா? விபரமாகக் கேள்வி கேட்கும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகிறார்கள். அரசு அதிகாரிகள் கமிசன் கேட்டு தொல்லை கொடுப்பதை இதோடு நிறுத்தி கொள்ளாவிட்டால், ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தில் தலையிட்டால், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு ஒரு போதும் இனி வேடிக்கை பார்க்காது, கமிசன் கேட்கும் அரசு அதிகாரிகளையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து போராட்டம் நடத்துவோம், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம் என தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட அரசு அதிகாரிகளின் கமி ஷன் விவகாரத்தை ஊராட்சி மன்றத்தலைவர்கள் அம்பலப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .

Advertisement
/body>