சுங்க சாவடியில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது

3 persons arrested for jewelery worth Rs 11 crore robbery in toll gate

by Subramanian, May 4, 2019, 10:15 AM IST

பரனூர் சுங்கச் சாவடி அருகே 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் கிரண்ராவ். சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர். சென்னை அண்ணாசாலையில் கிரண்ராவுக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இங்கு விலை உயர்ந்த நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடையின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நகை கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சி முடிவடைந்ததும் மீதி நகைகளையும், நகை விற்ற பணத்தையும் எடுத்துக்கொண்டு ஊழியர்கள் சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர். நகைக்கடை பொதுமேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் 2 பேர் காரில் ரூ.11 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் நகை விற்பனையான தொகை ரூ.7.50 லட்சத்தையும் ஒரு பெரிய பையில் வைத்து காரில் எடுத்து வந்தனர்.

கடந்த 29ம் தேதி அதிகாலையில் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி அருகே கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு கார் ஒன்று வந்தது. அந்த காரில் வந்தவர்கள் நகைக்கடை ஊழியர்கள் வந்த காரை வழிமறித்தனர். அதில் இருந்து டிரைவர் உள்பட 7 பேர் இறங்கினர். அதில் 2 பேர் போலீஸ் சீருடையில் இருந்தனர். தங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் என்று கூறிய அவர்கள், அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தனர்.

பின்னர், உங்கள் கடை உரிமையாளர் மீது சிலை கடத்தல் வழக்கு இருப்பதால், சந்தேகத்தின்பேரில் காரை சோதனையிட வந்திருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஊழியர்கள் காரை சோதனையிட அனுமதித்தனர். இதனையடுத்து காரில் இருந்த ஒரு பெரிய பையை அவர்கள் சோதனை செய்தனர்.

அதில் ஏராளமான நகைகள் இருந்தன. அவை அனைத்தையும் எடுத்துக்கொண்ட அவர்கள், விசாரணைக்காக நகைக்கடை ஊழியர்களையும் அழைத்து சென்றனர்.

காரை சோதனை செய்தவர்கள் அதிகாரிகள் தான் என்று நம்பிய ஊழியர்களும் அவர்களுடன் சென்றனர்.

ஒரகடம் என்ற இடம் அருகே கார் வந்தபோது, திடீரென நகைக்கடை ஊழியர்களை நடுரோட்டில் இறக்கி விட்ட கும்பல், அவர்களை செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறி சென்றதாக தெரிகிறது.

செய்வதறியாது திகைத்த ஊழியர்கள், அங்கிருந்து ஆட்டோ மூலமாக செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து சேர்த்தனர். அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் யாரும் போலீஸ் நிலையத்திற்கு வரவில்லை என்று அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர்.

உடனே இதுகுறித்து சென்னையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் வாகனசோதனை செய்யவில்லை என்று தெரிவித்தனர். இதன்பின்னர் தான், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் போல நடித்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள். சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த போலீசார், மேலாளர் தயாநிதி கொடுத்த தகவலின் பேரில் அப்பாஸ் என்ற நபரின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து அப்பாஸும் அவனது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே கொள்ளையர்கள் பயன்படுத்திய இன்னோவா கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்திருந்த போலீசார், 11 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து சந்தேகத்துக்கிடமான 15 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் போல் நடித்து நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை, ரூ.7.50 லட்சம் கொள்ளை

You'r reading சுங்க சாவடியில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை