தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை செய்துங்கநல்லூர் அருகிலுள்ள முத்தாலங்குறிச்சியில் அம்மன்கோவில் அருகே ஆற்றுப் படித்துறையில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பினை முருகன் என்பவர் பார்த்துள்ளார். உடனே வல்லநாட்டிலுள்ள வன அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பினை பிடித்து வல்லநாடு மலையிலுள்ள அடர்ந்த வனபகுதிக்குள் விட்டனர்.
கடந்த ஓராண்டு காலத்திற்குள் நான்கு முறைக்கு மேல் மலைப்பாம்புகள் ஊருக்குள் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் தங்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்