மார்ச் 14ம் தேதி, உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது. வாழ்க்கை முறை ஆரோக்கிய குறைபாடுகளான சர்க்கரை நோய் என்னும் நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் இந்தியாவில் அதிகரித்து வரும் காரணத்தால், சிறுநீரக பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்புக்குக் காரணமாகும் ஐந்து நோய்களுள் சிறுநீரக செயலிழப்பும் ஒன்றாகும்.
2017ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவின் கிராமப்புறங்களில் நீரிழிவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7.5 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 28 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது. பெரும்பாலும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக உருவாகும் நீண்டகால சிறுநீரக பாதிப்பு 2.5 விழுக்காட்டிலிருந்து 13 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் உச்சபட்ச அளவை கட்டுப்படுத்த தவறுவதே சிறுநீரக பாதிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. 20 முதல் 40 வயதுக்குள்ளானவர்கள்கூட நீரிழிவால் பாதிக்கப்படுவதால், நீரிழிவு கட்டுப்படுத்தப்படாத நிலையில் சிறுநீரக பாதிப்பை உருவாக்குகிறது.
நீண்ட கால சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாகிறது. அவர்களுள் 10 முதல் 15 விழுக்காட்டு மக்களுக்கே முறையான சிகிச்சை கிடைக்கிறது. ஆண்டுக்கு 6,000 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். 60,000 பேர் இயந்திர வழி (hemodialysis) செயற்கை முறையையும், 6,000 பேர் வயிற்றுக்குள் செய்யப்படும் சுத்திகரிப்பு முறையையும் (peritoneal dialysis)பயன்படுத்த வேண்டிய அவசியம் நேர்கிறது. சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படும் 6 லட்சம் பேர் வேறு வழியின்றி மரணத்தை தழுவுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சரியான சிகிச்சை வழங்க பெருமளவு பொருளாதாரம் தேவை.
புரோட்டீன்யூரியா மற்றும் கிரியாட்டின் ஆகியவற்றின் அளவை கண்காணித்து வருவது, சிறுநீரக கோளாறை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும். ஆரம்ப நிலையில் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், பின்னாளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.
உடல் தகுதியை பராமரித்தல், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருத்தல், சரியான உடல் எடையை பராமரித்தல், ஒழுங்காக உடற்பயிற்சி செய்தல், பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த பதார்த்தங்களை குறைவாக உண்ணுதல், போதுமான அளவு நீர் அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்த்தல் ஆகியவற்றை கடைபிடித்தால் சிறுநீரகங்கள் பழுதுபடாமல் காத்துக் கொள்ள முடியும்.
உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கற்கள் ஆகிய பாதிப்புகள், சிறுநீரக கோளாறுக்கு காரணமாவதால், இவற்றை தொடர்ந்து கண்காணித்து வருவது சிறுநீரகங்கள் பாதிப்புறாமல் தடுக்கலாம்.