பழங்கள் ஆரோக்கியத்தை நமக்கு அளிப்பவை. நன்மையே தருபவை என்றாலும் அவற்றிலிருந்து முழு பலனை பெற்றுக்கொள்ள சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்கவேண்டும். நாம் நினைக்கும்போதெல்லாம் பழங்களை சாப்பிடுவதை காட்டிலும் உரிய நேரத்தில் சாப்பிடுவது பயன் தரும்.
பழங்களை சாப்பிடுவதற்கு ஏற்ற நேரம் எது?
காலையில் பழங்களை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏற்ற நேரத்தில் பழங்கள் மூலம் கிடைக்கும். ஆகவே, சுறுசுறுப்பாக இயங்க முடியும். வயிறு வெறுமையாக இருக்கும்போது பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, அதிகப்படியான உடல் எடையை குறைக்கவும் செய்யும். வேறு எந்த ஆகாரமும் சாப்பிடுவதற்கு முன்பாக பழங்களை உண்பதால் உடல் எல்லா வைட்டமின்கள், நல்ல சர்க்கரை மற்றும் நார்ச்சத்துக்களை பெற்றுக்கொள்ளும். அதன் காரணமாக உடலும் கட்டமைப்பு பெறும்.
காலை மற்றும் மதிய உணவுகளுக்கு இடையிலும் பழங்களை உண்ணலாம். இப்படி இருவேளை உணவுகளுக்கு இடையில் பழங்களை சாப்பிடுவது என்றால் உணவு உண்ணும் நேரம் மற்றும் அளவு ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். காலை உணவுக்கு பிறகு பழம் சாப்பிட்டால், அதன் பின் இரண்டு மணி நேரத்துக்கு பசிக்காது. செரிமானம் சீராக நடைபெறும். இதுபோன்ற நேரங்களில் காலை, மதியம் இருவேளை சாப்பிடும் உணவு அளவில் கட்டுப்பாடு இருக்கவேண்டும். அதிகமாக சாப்பிட்டு விடக்கூடாது.
உணவுக்குப் பின் பழம் சாப்பிடலாமா?
பழங்களில் ஊட்டச்சத்து இருந்தாலும், அவற்றில் கலோரி என்னும் ஆற்றலும் உண்டு. திருப்தியாக உணவு சாப்பிட்ட பிறகு பழங்களும் சாப்பிட்டால் உடலில் தேவைக்கு அதிகமான கலோரி என்னும் ஆற்றல் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. அதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கக்கூடும். சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது, இறைச்சி, காய்கறிகள், பால் பொருள்கள் மற்றும் முழு தானியங்கள் மூலம் உடலில் சேர வேண்டிய சத்துக்களை சேராமல் தடுக்கக்கூடும். பழங்கள் மூலம் உடலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்களும் முழுமையாக கிடைக்காமல் போகலாம்.
ஆகவே, சரியான நேரத்தில் பழங்களை சாப்பிட்டு முழு பயன் பெறுங்கள்.