உடல் எடைக்கும் தோற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? பலர், ஸ்லிம் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொள்வதை கேட்கும்போது, உடல் எடை, தோற்றத்துடன் தொடர்புடையது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. தோற்றத்தைக் காட்டிலும் உடல் ஆரோக்கியத்துடன்தான் உடல் எடைக்குத் தொடர்பு இருக்கிறது.
தேவைக்கு அதிகமான எடையுடன் இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு, உயர் இரத்தஅழுத்தம், மகப்பேறு பிரச்னைகள் ஆகியவை வருவதற்கு வாய்ப்பு அதிகம். வாழும் ஒரே வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவது அதிகப்படியான எடைதான்!
உடல் எடையை குறைப்பதற்கான சில வழிமுறைகள்:
உணவு:
தட்டப்பயிறு, காராமணி, அவரைக்காய், கொண்டை கடலை, பட்டாணி, சோயாபீன்ஸ் போன்ற பீன்ஸ் வகை தானியங்கள், வால்நட் என்னும் வாதுமை கொட்டை, ஆப்பிள், ஓட்ஸ், இஞ்சி, கிரீன் டீ இவை உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டும். உடலில் சர்க்கரை சேராமல், உணவை உடைத்து ஆற்றலாக மாற்றுவதற்கு இவை உதவுகின்றன. ஆகவே, இவ்வகை உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சி:
உடல் எடை குறைவதற்கு உடற்பயிற்சியும் அவசியம். அது இல்லாமல் மற்ற முயற்சிகளை எடுத்தால் அவை பயனில்லாமல் போகக்கூடும். ஓடுதல், மிதிவண்டி ஓட்டுதல், பூட் கேம்பிங் எனப்படும் உடல் மட்டும் அசையும் பயிற்சிகள் போன்றவை விரைவாக எடையை குறைக்க உதவும். ஜாகிங், நீந்துதல் போன்ற பயிற்சிகளும் பயன்தரும்.
எடை தூக்கும் பயிற்சி:
வெயிட் டிரைனிங் எனப்படும் சிறு எடைகளை தூக்கிக் கொண்டு செய்யும் உடற்பயிற்சிகள், உடல் எடையை குறைக்க உதவுவதோடு நெடுங்காலமாக கட்டுக்கோப்பாக உடலை பேணுவதற்கு வழிசெய்யும். முறையாக இந்தப் பயிற்சியை மேற்கொண்டால் உடலின் வளர்சிதை மாற்றம் தூண்டப்பெற்று, கலோரி என்னும் ஆற்றல் எரிக்கப்பட்டு தசைகளை வலுவடையச் செய்யும்.
பட்டினி வேண்டாம்:
உடலை குறைக்கிறேன் என்று அநேகர் உணவு உண்பதை தவிர்க்கின்றனர். அது மிகவும் தவறான காரியம். சிலவேளைகளின் அது எதிர்மறை விளைவுகளையும் கொடுத்து விடும். சிறிது சிறிதாக அடிக்கடி உணவுகளை சாப்பிடலாம்.
போதுமான தூக்கம்:
உடல் எடை குறைய வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், போதுமான அளவு உறங்க வேண்டும். சரியான தூக்கமில்லாமல் இருப்பது அடிக்கடி சோர்வுறச் செய்யும். பணிகளை திறம்பட செய்ய இயலாது. ஆகவே, உடல் அதிகமான சர்க்கரை உணவுகளை தேட ஆரம்பிக்கும்.
சரியான காலை உணவு:
அதிகமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் என்னும் புரதம் அடங்கிய உணவை காலையில் சாப்பிட வேண்டும். இது உடலுக்கு போதுமான ஆற்றலை அளிக்கும். ஆகவே, இடையிடையே நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.
நடைப்பயிற்சி:
நன்றாக நடப்பதன் மூலம் தேவைக்கு அதிகமான எடையை குறைக்கலாம். தினந்தோறும் அரைமணி நேரம் நடந்தால் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம். முக்கால் மணி நேரம் நடந்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
பழங்கள்:
பழங்கள் சாப்பிடுவதும், சர்க்கரை கூட்டுப்பொருள் உணவுகளை தவிர்ப்பதும் விரைவில் உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய பழக்கம்.
இவற்றை சரியான முறையில் கைக்கொள்ளுங்கள், கட்டுக்கோப்பான உடல் கிடைக்கும்.