மனிதக் கரு முட்டைகளை முழு முதிர்ச்சி அடையும் வரை ஆய்வகத்தில் வளர்ப்பதில், அறிவியலாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
எடின்பர்க்கில் உள்ள மருத்துவமனை ஆய்வகத்திலும், நியூயார்க்கில் உள்ள மனித இனப்பெருக்க ஆய்வு மையத்திலும் நடத்திய சோதனை முடிவுகளை ‘மூலக்கூறியல் மனித மறு உற்பத்தி’ என்ற மருத்துவ ஆய்விதழ் வெளியிட்டுள்ளது.
அதில், ஏற்கனவே எலியின் கருமுட்டையை முழு முதிர்ச்சி அடைவதற்கு முந்தைய நிலைவரை வளர்த்து வெற்றி கண்டதாகவும், இதே போல் மனிதக் கரு முட்டையையும் முழு முதிர்ச்சிக்கு முந்தைய நிலை வரை வளர்த்து வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கருமுட்டையில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்ற ஆய்வு தற்போது நடந்து வருகிறது. இந்த சோதனையும் வெற்றி பெற்றால், குழந்தையின்மைக்கான பிரச்சனைக்கு எளிதான தீர்வு கிடைக்கும் என ஆய்வில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கூறியுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க சுகாதாரம் மையத்தின் ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான ஈவ்லைன் டெல்ஃபர், “நாம் காணும் இந்த முட்டைகள், சாதாரணமாகவும், கருக்களை உருவாக்கக் கூடியதாகவும் இருந்தால், எதிர்காலத்தில் நிறைய பேருக்கு பொருத்தி சிகிச்சையளிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.