குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்னை: தெரிந்து கொள்ள வேண்டியவை

Stomach infection of Child: Facts to know

by SAM ASIR, Aug 2, 2019, 18:21 PM IST

குழந்தைகள் என்ன சாப்பிடுவர் என்றே உறுதியாக கூற இயலாது. பார்த்து பார்த்து சமைத்து வைத்திருக்கும் உணவுகளை சாப்பிடமாட்டார்கள். எதை எதையோ வாயில் எடுத்துப் போட்டுக் கொள்வார்கள்.

சுத்தமில்லாத உணவு, அரைவேக்காடாக சமைக்கப்பட்டவை, பச்சையாக இருப்பவை எதுவும் குழந்தைகளுக்குப் பொருட்டல்ல.

மற்றவர்கள் சாப்பிடுவது, பார்வைக்கு வித்தியாசமாக தெரிவது என எல்லாவற்றையும் அடம் பிடித்தோ, யாருக்கும் தெரியாமலோ எடுத்து சாப்பிட்டுவிடுவார்கள். பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதுவும் ஒன்று முதல் மூன்று வயதாகும் பருவத்தினருக்கு செரிமான மண்டலம் முழுமையான வளர்ச்சி பெறாமல் இருக்கக்கூடும். ஆகவே, சில உணவு பொருள்களில் இருக்கக்கூடிய கிருமிகளை தடுக்கக்கூடிய ஆற்றல் வயிற்றுக்கு இருக்காது. இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்னை அடிக்கடி வர நேரிடுகிறது.
வயிற்றுப் பிரச்னையை அறிவது எப்படி?

வயிறு பாதிக்கப்பட்டால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கும். நீர்ச்சத்து குறைவதற்கான அறிகுறிகள் தென்படும்.

வயிற்றுவலியும், வயிற்றை யாரோ பிசைவதுபோன்ற உணர்வும் இருக்கும்
சிறுநீர் ஒழுங்கான இடைவெளியில் வெளியேறாமை

வாயில் எச்சில் குறைவது

102 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல்

அசதி, சோர்வு

உற்சாகமின்மை

இவை இருந்தால் குழந்தைக்கு வயிறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மலத்தில் இரத்தம், சளி போன்றவை வெளியேறினால் மற்றும் மலம் கறுப்பாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
தவிர்ப்பது எப்படி?

ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்குத் தர வேண்டும். நன்கு சமைத்த உணவுகளை மட்டுமே ஊட்ட வேண்டும். வீட்டின் தரையை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். குழந்தை விளையாடும் பொம்மைகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மணல் மற்றும் சகதியில் குழந்தை விளையாடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

திரவ உணவு: வயிறு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் உடலில் நீர்ச்சத்து குறைந்துபோகும். ஆகவே, தேவையான அளவு திரவம் உடலில் சேர்வதை உறுதி செய்யவேண்டும். நீர்ச்சத்து குறைந்துபோனால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் எழக்கூடும். ஆகவே, எலக்ட்ரோலைட் என்ற சத்துகள் குறைந்திடாமல் அவை உள்ள திரவ உணவை அளிக்கவேண்டும்.

உணவு: வயிறு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பால் மற்றும் தயிர் போன்ற உணவுகளை அளிக்கக்கூடாது. அது பாதிப்பை அதிகரிக்கும். சிறிதளவு சோறு, ரொட்டி மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை கொடுக்கலாம். காய்கறி சூப் கொடுக்கலாம். பொறித்த மற்றும் மசாலா சேர்த்த உணவு பொருள்களை தவிர்க்கவேண்டும்.

மருந்து: குழந்தைக்கு வயிறு பாதிப்பு ஏற்பட்டால் நீங்களாகவே அல்லது மற்றவர்கள் கூறுவதாலோ ஏதோ ஒரு மருந்தை கொடுக்கக்கூடாது. சாதாரண எதிர் உயிரி மருந்துகள் வைரஸ்களை எதிர்த்து வேலை செய்யாது. ஆகவே, உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது குழந்தை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்வதே நல்லது.

You'r reading குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்னை: தெரிந்து கொள்ள வேண்டியவை Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை