யோகர்ட் - தயிர்: இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

by SAM ASIR, Aug 12, 2019, 23:12 PM IST
Share Tweet Whatsapp

தயிர், யோகர்ட் இரண்டும் இடையில் என்ன வித்தியாசம்? என்பது பரவலாக உள்ள கேள்வி. அதுவும் 'டயட்' என்னும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவோர் நடுவில் 'யோகர்ட்' என்பது பிரபலமான வார்த்தை.

 


சிலர், இந்தியாவில் தயிர் என்று கூறுவதைதான், மேற்குலக நாடுகளில் 'யோகர்ட்' என்று அழைக்கின்றனர் என்று நம்புகின்றனர். இது தவறு! தயாரிக்கும் முறை மற்றும் நொதித்தலை தூண்டும் நன்மை தரும் நுண்ணுயிரி (பாக்டீரியா) ஆகியவற்றின் அடிப்படையில் தயிர், யோகர்ட் இரண்டும் வேறுபடுகிறது.
யோகர்ட்டில் பல வகை இருந்தாலும் 'கிரீக் யோகர்ட்' என்ற வகையே உணவியலாளர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. உடற்பயிற்சியின்போது ஏற்படும் தசை பாதிப்பை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

 

பயிற்சியின்போது தசையில் ஏற்படும் அயற்சியை குறைக்கும் பண்பும் யோகர்ட்டுக்கு உண்டு. உடற்பயிற்சியின்போது ஏற்படும் களைப்பிலிருந்து உடல் சீக்கிரமாக மீள்வதற்கும் இது உதவும்.


சிறிய கிண்ணத்திலுள்ள தயிரில் 3 முதல் 4 கிராம் புரதம் (புரோட்டீன்) இருக்கும். அதே அளவான கிரீக் யோகர்ட்டில் 8 முதல் 10 கிராம் புரதம் இருக்கும்.


உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் பராமரிக்கப்படுவதற்கு டி-செல்களே பொறுப்பு. தினமும் யோகர்ட் சாப்பிட்டு வந்தால் டி-செல்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.


பாலிலுள்ள லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாதவர்கள்கூட யோகர்ட்டை சேர்த்துக்கொள்ளலாம். பாலிலுள்ள லாக்டோஸ் யோகர்ட்டில் லாக்டிக் அமிலமாக மாற்றப்படுகிறது. இது எளிதில் செரிக்கக்கூடியதாகும்.
வீட்டில் யோகர்ட் தயாரிக்கும் முறை
தேவைப்படும் அளவு பால் எடுத்து அதை கொதிக்கும் வரைக்கும் சூடாக்கவும்.

 

கொதித்த பாலை கண்ணாடி பாத்திரம் ஒன்றில் ஊற்றவும்.
தானாக வெதுவெதுப்பாக (100 - 105 டிகிரி பாரன்ஹீட்) நிலையை அடையும் வரை ஆற விடவேண்டும். அப்போது பாலின்மேல் ஆடை படரும்.
முன்பு வீட்டில் தயாரித்த அல்லது கடையில் வாங்கிய யோகர்ட்டில் இரண்டு மேசைக்கரண்டி அளவு எடுத்து ஆறிய பாலுடன் சேர்க்கவும். முடிந்த அளவு பால்மேல் படர்ந்த ஆடை சிதைவுறாமல் கலக்கவும்.


இந்த கண்ணாடி பாத்திரத்தை வெதுவெதுப்பான தண்ணீருக்குள் குறைந்தது எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கவும். 8 முதல் 12 மணி நேரம் விரும்பத்தக்கது. எவ்வளவு நேரம் யோகர்ட் உறைகிறதோ அவ்வளவு புளிப்புச் சுவை கிட்டும்.


எஞ்சிய நீர்மத்தை கவனமாக வடித்தெடுக்கவும்.
குளிர்சாதன பெட்டியில் நான்கு மணி நேரம் வைத்திருந்து பின்னர் பயன்படுத்தவும். தயாரித்து 4 முதல் 5 நாள்களுக்குள் பயன்படுத்தவும்.
மறுமுறை தயாரிக்க சிறிது யோகர்ட்டை எடுத்து வைக்கவும்.


Leave a reply