இப்படி செய்தால் போதும் கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்!

by SAM ASIR, Aug 19, 2019, 19:00 PM IST

மருத்துவ உலகில் 'கொலஸ்ட்ரால்' மிகவும் பயத்திற்குரிய வார்த்தையாகவே பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது, உடல் எடையில் பிரச்னையை கொண்டு வருவது, உடலில் இரத்த ஓட்டம் குறைவதற்குக் காரணமாகி, நெஞ்சு வலி, வயிற்று வலி போன்ற உடல் நல கோளாறுகளை ஏற்படுத்துவது, செரிமான பாதையில் பித்த கற்கள் உருவாக்குவது மற்றும் இதய நோயை கொண்டுவருவது என பல ஆரோக்கிய கேட்டுக்கு கொலஸ்ட்ரால் காரணமாகிறது.

குறையடர்த்தி கொண்ட லிபோபுரோட்டீன் கொலஸ்ட்ரால் என்னும் எல்டிஎல் உடலுக்குத் தீங்கு விளைக்கிறது. சில வகை கொலஸ்ட்ரால் உடலுக்கும் தேவையான கொழுப்பு உற்பத்திக்கு உதவுவதோடு உடல் எடையையும் ஒழுங்குபடுத்துகிறது.

எல்டிஎல் வகை கொலஸ்ட்ரால், ஆக்ஸிஜன் அடங்கிய தூய இரத்தத்தை இதயத்திலிருந்து உடல் உறுப்புகளுக்குக் கொண்டு செல்லும் தமனிகளில் மெழுகுபோன்ற படிவுகளை உருவாக்கி, ஓடும் இரத்தத்தை அடைக்கிறது.

நம் உடலில் ஈரல், இயற்கையாகவே கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. நாம் சாப்பிடும் சில உணவு பொருள்கள், அவற்றை சாப்பிடும் அளவு ஆகியவை நன்மை செய்யும் கொலஸ்ட்ராலின் அளவை விட, தீங்கு செய்யும் கொலஸ்ட்ராலின் அளவு கூடுவதற்குக் காரணமாகிறது.

எந்த வயதினராக இருந்தாலும் உடலிலுள்ள கொலஸ்ட்ராலின் அளவை பரிசோதித்து பார்த்துக்கொள்வது நல்லது. வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை செய்தால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

வாங்கும்போது கவனம்

மளிகை கடை அல்லது சூப்பர் மார்க்கெட்டில் பொருள்களை வாங்கும்போது அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வாசித்துப் பார்க்கவேண்டும். சில தயாரிப்புகளில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்கள் அடங்கியிருக்கக்கூடும். குறிப்பிட்ட தயாரிப்பில் டிரான்ஸ்ஃபேட் எவ்வளவு இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். டிரான்ஸ்ஃபேட் அடங்கியிருக்கிற பொருள்கள் உடலில் எல்டிஎல் அளவை அதிகரிக்கச் செய்யும். சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவு, பிஸ்கட்டுகள் போன்றவற்றில் இருக்கும் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெயின் அளவையும் கவனிக்க வேண்டும். அப்படிப்பட்ட உணவு பொருள்களை தவிர்ப்பது நலம்.

அதிக நீர்

உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்கும்படி பராமரித்தல் நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிக நன்மைகளை தரும். தினமும் குறைந்தது ஐந்து குவளை நீர் அருந்தினால் உடலில் காணப்படும் தீங்கு தரும் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட நச்சுப்பொருள்கள் அகற்றப்படும். இதன் மூலம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு 50 முதல் 60 விழுக்காடு குறைகிறது. உடல் எடையை குறைப்பது, புகையிலை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு சமமாக இது நன்மை செய்யும்.

கொட்டை வகை உணவு

வாதுமை, முந்திரி போன்ற கொட்டை வகை உணவு பொருள்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலிலுள்ள தீங்கு விளைக்கும் கொலஸ்ட்ராலையும் அகற்றுகிறது. சிப்ஸ், பொறிந்த தின்பண்டங்கள் ஆகியவற்றால் உடலுக்கு நேரும் தீங்கினை ஒரு கையளவு பாதாம், முந்திரி ஆகியவற்றை தினமும் சாப்பிடுவதால் சரி செய்யலாம். உடலிலுள்ள டிரைகிளிசராய்டின் அளவையும் இது குறைக்கிறது. நார்ச்சத்து அடங்கிய தீட்டப்படாத தானியங்கள், பப்ளிமாஸ் மற்றும் மாதுளை ஆகிய பழங்களை சாப்பிடுவதன் மூலமும் நன்மை பெறலாம்.

நடமாடுதல் நலம்

அதிகமாக உடற்செயல்பாடுகளில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. வீட்டு வேலைகள் செய்வது, நடப்பது, விளையாடுவது ஆகியவை கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதுடன் இதயத்தை இளமையாக காத்துக்கொள்ளும். அதிக நேரம் வேலை செய்யும்போது, சிறிய இடைவெளி எடுத்து நடப்பது அதிக நன்மை செய்யும் என்றும் உடல்நல வல்லுநர்கள் கூறுகிறார்கள்.


Leave a reply