இந்தியாவில் விற்பனையாகும் கிரீம் பிஸ்கெட்டுகளில் அதிக அளவு சர்க்கரையும், கொழுப்பும் இருப்பது தெரிய வந்துள்ளது.
நுகர்வோர் கல்வி மற்றும் ஆய்வு மையம் என்கிற அமைப்பு பதஞ்சலி, பார்லே, பிர்ட்டானியா, ஐடிசி உள்ளிட்ட 10 நிறுவனங்களின் பிஸ்கெட்டுகளை ஆய்வு செய்தது. அப்போது இந்த அனைத்து தயாரிப்புகளிலுமே, 100 கிராம் பிஸ்கெட்டில் 25 கிராம் சர்க்கரையின் அளவு இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், மேற்கண்ட பத்து நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் தயாரிப்புகளில் 100 கிராம் பிஸ்கட்டுகளில் 20 கிராம் அளவுக்குக் கொழுப்பும் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அளவுகளின்படி, ஒரு மனிதன் ஒரு நாளுக்கு அதிகபட்சமாகவே 25 கிராம் சர்க்கரையையும், 20 கிராம் கொழுப்பையும்தான் உடலில் சேர அனுமதிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால், நாம் உண்ணும் 100 கிராம் பிஸ்கெட்டுகளிலேயே வரையறுத்துள்ள கொழுப்பும், சர்க்கரையும் சேர்ந்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பிஸ்கெட்டுக்களில் குறிப்பிட்ட அளவிற்கு உச்ச வரம்பு நிர்ணயித்து விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.