எடை குறைக்க விரும்பும் பெண்களுக்கு...

Weigh loss for womens

by SAM ASIR, Aug 18, 2020, 17:43 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் தற்போதுதான் திறக்கப்பட்டு வருகின்றன. 'இத்தனை நாள் பயிற்சி செய்ய முடியவில்லையே' என்ற ஆதங்கத்திலிருந்தவர்கள் உடனடியாக உடற்பயிற்சிகளைத் தொடங்கியிருப்பர். 'இத்தனை மாதம் செய்யாமல் இருந்தாகிவிட்டது; இனி எப்படித் தொடங்குவது?' என்று சிலர் தயங்கிக் கொண்டிருப்பர்.

பெண்கள் பெரும்பாலும் உடல் எடையைக் குறைப்பதற்காகவே உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்வர். ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதற்குத் திடமான தீர்மானமும், உத்வேகமும், நேர விஷயத்தில் ஒழுக்கமும் அவசியம். உடற்பயிற்சியை ஆரம்பிக்கத் தயங்கும் பெண்களுக்கு வல்லுநர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

தனிமையாக உணர வேண்டாம்: பல பெண்கள் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லும்போது தனிமையாக உணர்வர். அதன் காரணமாகவே அவர்கள் உடற்பயிற்சியைத் தொடர இயலாமல் போகிறது. உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தால் போதும். உங்களுக்கு உதவுவதற்குப் பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் பல கருவிகள் உண்டு. ஆகவே, தனிமையாக உணராதீர்கள். ஆர்வத்துடன் உடற்பயிற்சிக் கூடத்தில் அடியெடுத்து வைத்திடுங்கள்.

ஒரு நேரத்தில் ஒரு பயிற்சி மட்டும் போதும்: உடல் எடையைக் குறைப்பதற்கு இரண்டு அல்லது மூன்று பயிற்சிகளுடன் தொடங்கினால் போதும். இரண்டு பயிற்சிகளைச் செய்யமுடிவில்லையென்றால், ஒரே ஒரு பயிற்சியைச் செய்யுங்கள். ஒரு பயிற்சியை நன்றாகச் செய்தாலே பலர் மன நிறைவடைந்து விடுவர். ஒரு பயிற்சியை நன்றாகச் செய்வதற்குப் பழகிவிட்டால், மனம் தொடர்ந்த பயிற்சிகளை எதிர்கொள்ளத் தயாராகி விடும். ஆகவே, ஒரு பயிற்சியில் ஆரம்பியுங்கள்.

யாருடனும் ஒப்பிடாதீர்கள்: தோழியருடனோ, உடற்பயிற்சிக் கூடத்திற்கு வரும் மற்றவர்களுடனோ ஒருபோதும் உங்களை ஒப்பிட வேண்டாம். அது வேண்டாத மனக்குழப்பத்தைத் தரும். ஒவ்வொருவருடைய உடல் அமைப்பு, உடல் தகுதி, ஆற்றல் ஆகியவை வேறுபட்டவை. ஆகவே, உடற்பயிற்சி விஷயத்தில் யாரையும் மாதிரியாகக் கொள்ளாதீர்கள். எந்தப் பயிற்சிகளை உங்களால் எளிதாகச் செய்ய முடிகிறது? எவை கடினமாக உள்ளன என்பதைப் பயிற்சியாளரிடம் கூறினால், உங்கள் உடல் தகுதிக்கேற்ப பயிற்சிகளை அவர் மாற்றியமைத்துத் தருவார்.

எட்டக்கூடிய இலக்குகள்: உங்கள் உடல் எடை ஆறு மாதங்களில் கூடியிருக்கிறது என்றால் அதை இரண்டு மாத காலத்திற்குள் குறைக்க முடியாது. ஆகவே, ஒரு மாதத்தில் குறைய வேண்டும்; ஒரு வாரத்தில் இத்தனை கிலோ எடை குறையவேண்டும் என்றெல்லாம் இலக்குகளை நிர்ணயிக்காதீர்கள். அவற்றை எட்ட முடியாமல் மனம் சோர்ந்து போவீர்கள். உங்கள் வாழ்வியல் முறையை மாற்றுவது, உடற்பயிற்சி செய்வது என்ற பல காரணிகளால்தான் உடல் எடையைக் குறைக்க முடியும். ஆகவே, எட்டக்கூடியதாக இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

பட்டினி வேண்டாம்: உடல் எடையைக் குறைப்பதற்கு அல்லது வயிற்றுப் பகுதி சதையைக் குறைப்பதற்குப் பல பெண்கள் தீவிரமான உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க நினைப்பார்கள். சிலர் உண்பதைத் தவிர்ப்பார்கள். பட்டினி கிடந்து எடையைக் குறைக்க முயற்சிக்கவேண்டாம். அது எதிர்மறை விளைவுகளைத் தரும். மாறாக, சுறுசுறுப்பாக நடமாடுங்கள்; ஓடியாடி வேலை செய்யுங்கள்; பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்; நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதை முடிந்த அளவு குறைத்துக்கொள்ளுங்கள்; அதிகம் தண்ணீர் பருகுங்கள்; நன்றாக உறங்குங்கள். இதுபோன்ற வாழ்வியல் முறை மாற்றங்கள் ஆரோக்கியமான விதத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.

You'r reading எடை குறைக்க விரும்பும் பெண்களுக்கு... Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை