கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும் சாதாரண சளியால் பாதிக்கப்பட்டோருக்கும் ஒரே விதமான அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்படுவதால் அவற்றைப் பிரித்தறிவது கடினமாக உள்ளது. இது குறித்த ஓர் ஆய்வை ஐக்கிய ராஜ்ஜியத்தின் (UK) கிழக்கு ஏஞ்ஜ்லியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.கோவிட்-19 கிருமி, மூளையையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது என்ற இந்தக் குழுவின் கண்டுபிடிப்பு ரினோலஜி மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சாதாரண சளி என்பது மூச்சுக்குழலின் மேல் பகுதியில் ஏற்படும் நோய்த்தொற்றின் காரணமாகப் பாதிக்கிறது. கடுமையான சளி உள்ளவர்களுக்கும் வாசனையை அறிய முடியாத நிலை உருவாகிறது. ஆனால் கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு வாசனையையும் உணவின் சுவையையும் அறிய இயலாத நிலை ஏற்பட்டாலும் மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் ஒழுகுதல் ஆகிய அறிகுறிகள் இல்லை. கொரோனா பாதிப்புள்ளோருக்கு இனிப்பு அல்லது கசப்பு சுவைகளைப் பிரித்தறிய முடியாது என்று இந்த ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட்-19 கிருமி பாதிப்பு கொண்டோர் பத்து பேர், கடுமையான சளி பாதிப்பு கொண்டோர் பத்து பேர் மற்றும் ஆரோக்கியமானோர் பத்து பேர் ஆகியோரிடம் இந்தக் குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் பங்கேற்றோர் அத்தனைப்பேரும் ஒரே வயது மற்றும் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"கோவிட்-19 பாதிப்பின் காரணமான வாசனை இழப்புக்கும் சளி மற்றும் மூக்கடைப்பின் காரணமான வாசனை இழப்புக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறிய விரும்பினோம். கோவிட்-19 கிருமி, மூச்சுப்பாதையைப் பாதிக்கும் ஏனைய கிருமிகளிடமிருந்து வேறுபட்டது. அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் சைட்டோகைன் புயல் என்ற மிகுதியான செயல்பாட்டைத் தூண்டி, நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. கசப்பு அல்லது இனிப்பு சுவையைப் பிரித்தறிய முடியாத அறிகுறியை, முறையான மாதிரிகளை எடுத்துச் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு மாற்றாகக் கொள்ள முடியாது. ஆனால், வேறு பரிசோதனைகள் செய்யப்பட முடியாத முதனிலை பராமரிப்பு மையம், அவசர சிகிச்சை மையம் மற்றும் விமான நிலையங்களில் இந்த முறையைக் கையாளலாம் என்று ஆய்வுக் குழுவின் தலைவரும் கிழக்கு ஏஞ்ஜ்லியா பல்கலைக்கழகத்தின் நார்விச் மருத்துவ பள்ளியின் பேராசிரியருமான கார்ல் பில்போட் தெரிவித்துள்ளார்.