கண்ணுக்கு மை அழகு.. என்ற பாடல் வரியில் கூறுவதுப்போல் மை இட்டால் அழகிய கண்களுக்கும் கூடுதல் அழகுத் தரும். ஆனால் நாம் இடும் மை கெமிக்கல் கலந்ததாக இருக்கக்கூடாது. பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் மைகள் கெமிக்கல் கலந்தவையாகத் தான் இருக்கிறது.
அதனால், வீட்டிலேயே தூய்மையான மற்றும் கெமிக்கல் கலக்காத மை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்..
மை தயாரிப்பதற்கு, பாதாம் 5, ஓமம் விதை ஒரு கைப்பிடி, கடுகு எண்ணெய் அரை கப், பாதாம் எண்ணெய் ஒரு தேக்கரண்டி, பஞ்சு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
முதலில் பாதாம் பருப்பை சிறிய துண்டுகளாக இடித்துக் கொள்ளவும். பிறகு, பஞ்சு எடுத்து பரப்பி அதில் இடித்த பாதாம், ஓமம் விதை போட்டு திரிப் போன்று சுருட்டவும்.
ஒரு அகண்ட அகல் விளக்கில் கடுகு எண்ணெய் முழுவதும் ஊற்றி தயாராக வைத்திருந்த பஞ்சுத் திரியை வைத்து ஒரு மூலையில் தீ பற்ற வைக்கவும்.
பின், வாய் வைத்த வெண்கலத் தட்டைக் கொண்டு சிறிது இடைவெளிவிட்டு விளக்கை மூடவும்.
திரி முழுவதும் எரிந்து முடிந்ததும் திறக்கவும். வெண்கலத் தட்டு முழுவதும் கருமைப் படிந்து இருக்கும். அவற்றை ஒரு கரண்டி வைத்து சுரண்டி எடுத்து தனியாக வைக்கவும்.
இந்த மை பொடியில், பாதாம் எண்ணெய்விட்டு நன்றாக கலக்கினால் இயற்கையான முறையில் தயார் செய்த கருமையான மை ரெடியாகிவிடும்.
நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணலாமே..!