கொரோனா காலம்: பருவமழையின்போது பாதுகாப்பாய் இருப்பது எப்படி?

Corona period: How to stay safe during the monsoon?

by SAM ASIR, Aug 26, 2020, 17:56 PM IST

ஏற்கனவே கொரோனா பயம் மனதை நிரப்பியிருக்கும் போது, இயற்கையாகப் பருவகாலங்களுக்கேற்ப வரும் உடல் நலப் பாதிப்புகள் அச்சத்தின் அளவை அதிகரிக்கக்கூடும். வழக்கமாக பருவ மழைக்காலத்தின் போது சில உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இப்போது அத்தகைய உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டால் மருத்துவ உதவியைத் தேடி அலைவது பெரிய சிரமமாகிவிடும். தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கும் வண்ணம் மழைக்காலத்தில் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடுவது நல்லது. 'வரும்முன் காப்போம்' என்பது எப்போதுமே பாதுகாப்பானது.

சோளம்:

'கார்ன்' என்று பரவலாக அறியப்படும் சோளம், பருவமழையின் போது சாப்பிடத்தக்க உணவுப் பொருளாகும். அவித்து அல்லது வறுத்து இதைச் சாப்பிடலாம். சிலர் சுவையைக் கூட்டுவதற்கு மிளகாய்ப் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வர். சோளத்தில் நார்ச்சத்து, கார்போஹைடிரேடு என்னும் மாவுச் சத்து மற்றும் புரதம் ஆகியவை உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து என்று இருவகை நார்ச்சத்தும் இதில் உள்ளதால் மலச்சிக்கலைத் தவிர்க்கிறது. செரிமான பிரச்சனைகளைத் தீர்க்கிறது. சோளத்தில் காணப்படும் ஆன்ட்டிஆக்சிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் புற்றுநோயைத் தடுப்பதோடு, இருதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது; இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


கோல்ட்-பிரஸ்ட் தேங்காய் எண்ணெய்:

வெப்பத்தைப் பயன்படுத்தாத முறையில் எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் கோல்ட்-பிரஸ்ட் தேங்காய் எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இது உடல் எடையைச் சீராகப் பராமரிக்க உதவுவதோடு, உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது; உடலுக்கு அதிக சக்தியையும் அளிக்கிறது. இதில் லாரிக் அமிலம், காப்ரிலிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் போன்ற நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (MCFA) அடங்கியுள்ளன. வைரங்களைச் சுற்றிப் பாதுகாப்பாய் காணப்படும் லிப்பிடுகளை கரையச் செய்து அவற்றை அழிக்கும் மோனாலாரின் செயல்பாடு இந்த எண்ணெய்யில் உள்ளது. ஆகவே, நோய்க்கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

வேர்க்கடலை:

நிலக்கடலையிலுள்ள சத்துகளைப் பற்றி அதிகம் யாரும் அறிந்திடவில்லை. செம்பு, மாங்கனீசு, இரும்பு உள்ளிட்ட அநேக தாதுகள் இதில் உள்ளன. ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் அதிக அளவில் உள்ளது. கார்போஹைடிரேடு குறைந்த அளவில் காணப்படுகிறது. வேர்க்கடலையிலுள்ள ரெஸ்வெரட்ரால் இருதயத்திற்குப் பாதுகாப்பு அளிப்பதோடு அல்சைமர் என்னும் நினைவு குழப்பம் ஏற்படுவதைத் தடுக்கிறது. வேர்க்கடலையை அவித்து மாலையில் சாப்பிடுவது இனிய அனுபவத்தைத் தரும். அதிக கலோரியுள்ள உணவு என்றெல்லாம் பயப்படவேண்டாம்; வேர்க்கடலை உடல் நலத்திற்கு ஏற்றது.

இஞ்சி:

சாலையோர கடைகளில் எப்போதும் இஞ்சி டீ கிடைக்கும். கொரோனா காலத்தில் வீட்டில் இஞ்சி டீ போட்டுக் குடிக்கலாம். நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மை இஞ்சிக்கு உள்ளது. ஆகவே, இஞ்சி அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியதாகும். சுவாசப் பாதை தொற்று, பூஞ்சை தொற்று மற்றும் அழற்சிகளைத் தடுக்கக்கூடிய தன்மை இஞ்சிக்கு உண்டு. காலையில் வெந்நீர் அல்லது தேநீரில் இஞ்சி கலந்து குடிப்பது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். எலுமிச்சை துண்டுகளை நீரில் போட்டு அதனுடன் சிறிது இஞ்சி சேர்த்துக் குடிப்பதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும்.

இந்தப் பொருள்களை எப்போதும் வீட்டில் வைத்திருங்கள். பருவ மழைக்காலத்தில் வரக்கூடிய உடல் நலக் குறைவுகளைத் தவிர்த்து, கொரோனா சமயத்தில் மருத்துவ உதவி தேடும் அவசியம் ஏற்படாமல் நிம்மதியாக இருக்கலாம்.

You'r reading கொரோனா காலம்: பருவமழையின்போது பாதுகாப்பாய் இருப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை