முழு உலகமுமே கண்ணுக்குத் தெரியாத எதிரியான கோவிட்-19 கிருமியுடன் போராடிக்கொண்டிருக்கிறது. ஆகவே அனைவரும் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருப்பது அவசியம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நல்ல உணவுகளைச் சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்தல், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தல் ஆகியவை முக்கியம். இவை அனைத்துமே வாழ்வியல் முறைகள். இவற்றை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் நாள்பட அவை ஆரோக்கிய கேடிற்கு காரணமாகும். உடல் நீர்ச்சத்து இழப்பு, ஊட்டச்சத்து குறைவு, அழற்சி (inflammation), அசதி, போதுமான உடற்பயிற்சி செய்யாமை இவையெல்லாம் ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறையின் அறிகுறிகளாகும்.
நோய் எதிர்ப்பு ஆற்றலின் அடிப்படை :
நம் உடல் போதுமான நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டிருக்கவேண்டுமானால் தினமும் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். எட்டு முதல் பத்து குவளை (தம்ளர்) நீர் அருந்தவேண்டும். சரிவிகித உணவு சாப்பிட வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவற்றில் எது குறைந்தாலும் அது நம் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
தண்ணீர் குறைவு:
மற்ற செயல்பாடுகளில் நாம் கவனமாக இருந்தாலும், உடலுக்குப் போதுமான நீர்ச்சத்து கிடைக்கிறதா என்பதை பெரும்பாலும் கவனிப்பதில்லை. வீட்டில் தாத்தாவோ, பாட்டியோ இருந்தால், "சோறு, தண்ணீர் இல்லாமல் வேலை பார்க்கிறான்," என்று கூறுவதைக் கவனித்திருக்கலாம். வேலைப் பளுவின் மத்தியில் பசிக்குக்கூட ஏதாவது சாப்பிட்டுவிடுவோம். ஆனால், தண்ணீர் அருந்த மறந்து விடுவோம். ஆகவே, தினமும் போதுமான தண்ணீர் அருந்துகிறோமா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள், அதை அருந்துவதற்குக் கீழ்க்காணும் வேடிக்கையான வழிகளைப் பின்பற்றலாம்.
காரமான உணவு:
'காரம்' உங்களை எளிதாகத் தண்ணீரை நோக்கித் தள்ளும் சுவை. 'எனக்குத் தண்ணீர் அருந்தும் ஞாபகம் வரவில்லை' என்பவர்கள், காரமான உணவுப் பொருள்களைச் சாப்பிடலாம். நாவில் காரம்பட்டவுடன், உங்களையும் அறியாமல் தண்ணீரைத் தேடுவீர்கள். நாவின் காரத்தை ஆற்றுவதற்குத் தண்ணீரைத் தேடினாலும், அதன் மூலம் சற்று அதிக அளவு தண்ணீர் உங்கள் உடலில் சேர வாய்ப்பு உள்ளது.
நீர்ச்சத்து அதிகமான உணவுப் பொருள்கள்:
நீங்கள் தண்ணீர் அருந்த மறந்துபோகும் நபராக இருக்கும்பட்சத்தில், அதிக நீர்ச்சத்துக் கொண்ட உணவுப் பொருள்களைச் சாப்பிடலாம். வெள்ளரி, தர்பூசணி, தக்காளி மற்றும் ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற காய்கறிகள், பழங்களில் நீர்ச்சத்து அதிகம். இவற்றைப் பெருமளவில் சாப்பிட்டால் உடலில் தண்ணீர் நன்றாகச் சேரும். நீங்கள் தண்ணீர் குடிக்காததன் காரணமாக வரக்கூடிய பாதிப்புகளை இவை சற்று குறைக்கும்.
சுவையூட்டப்பட்ட பானம்:
'தண்ணீரில் சுவையில்லை'. தண்ணீர் அருந்தாததற்கு இதைக் காரணமாகக் கூறுவீர்களென்றால், தண்ணீருடன் ஏதாவது சுவை சேர்த்து, அதாவது எலுமிச்சை, புதினா, தர்பூசணி இவற்றைச் சேர்த்து சுவையுடன் அருந்தலாம்.
வசீகரிக்கும் வாட்டர் பாட்டில்:
சற்று குழந்தைத்தனமான ஐடியா இது. ஆனாலும் பலருக்கு இது பலன் கொடுக்கும். நம் அனைவருக்குள்ளும் ஒரு குழந்தை இருப்பது உண்மை. சிலருக்கு சில வண்ணங்கள் பிடிக்கும்; சிலருக்கு சில தோற்றங்கள் பிடிக்கும். உங்கள் கவனத்தை இழுக்கும் வண்ணத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அந்த வண்ணம் கொண்ட தண்ணீர் பாட்டில் உங்களை ஈர்த்து, அதற்காக சில மடக்கு தண்ணீர் நீங்கள் பருகினாலும் உடலை ஆரோக்கியமாகக் காத்துக்கொள்ளலாம்.