எடையை குறைப்பதற்கு இதை கடைப்பிடிக்கிறீர்களா? கவனம்!

Do you follow this to lose weight? Attention!

by SAM ASIR, Aug 29, 2020, 17:45 PM IST

'எடை குறைப்பு' இதற்கான வழிமுறைகளை அநேகர் தேடுகின்றனர். உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் கூறப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றி எடையைக் குறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறைகளுள் ஒன்று கீட்டோஜெனிக் டயட் (கேடி)என்னும் உணவு ஒழுங்காகும்.

கே.டி. என்பது என்ன?கீட்டோஜெனிக் உணவு ஒழுங்கு, வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக 1924ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 1970ஆம் ஆண்டுகளில் உடல் எடையைக் குறைப்பதாக அது பிரபலமானது. இப்போதும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் அதை கடைப்பிடிக்கின்றனர். கீட்டோ டயட் என்று அறியப்படும் இம்முறையில் மிகக்குறைந்த அளவு கார்போஹைடிரேடும் மிக அதிக கொழுப்பும் நிறைந்த உணவுகள் இருக்கும். அதாவது, வழக்கமாக நம் உடல் குளூக்கோஸிலிருந்து (சர்க்கரை) ஆற்றலை உற்பத்தி செய்யும். விளையாடிய பிறகு, விரதம் இருந்த பிறகு, பட்டினி கிடந்த பிறகு நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் நம் உடல் ஆற்றலை உருவாக்குவதற்குக் கொழுப்பைப் பயன்படுத்தும். உடல் தொடர்ந்து கொழுப்பை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தும் நிலை 'கீட்டோசிஸ்' என்று அழைக்கப்படுகிறது.

சர்க்கரையை மிகவும் குறைக்கும்போது, ஈரலில் கிளைகோஜனாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் எல்லா சர்க்கரையையும் பயன்படுத்தும்படி உடல் கட்டாயப்படுத்தப்படுகிறது. அந்தச் சர்க்கரையும் பயன்படுத்தப்பட்ட பிறகு, உடலின் ஆற்றலுக்குக் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது. இரண்டு முதல் நான்கு நாள்களுக்குள் உடல் கீட்டோஸில் நிலையில் செயல்பட ஆரம்பிக்கும்.

கீட்டோவின் வகைகள்

நாளொன்றுக்குப் பெரியவர் ஒருவர் 225 முதல் 323 கிராம் கார்போஹைடிரேடு சேர்க்க வேண்டும். அது ஒரு நாளைக்கான கலோரி அளவில் 45 முதல் 60 சதவீதமாகும். எஸ்கேடி என்னும் ஸ்டாண்டர்ட் கீட்டோ டயட்டில் ஒரு நாளைக்கு 50 கிராம் சர்க்கரை மட்டுமே சேர்த்துக்கொள்ளவேண்டும். அது ஒருநாளைக்கான ஆற்றலில் 10 சதவீதம் மட்டுமே. மீதி கலோரிகள் 20 சதவீதம் புரதமாகவும், 70 சதவீதம் கொழுப்பாகவும் பிரிக்கப்படுகிறது.
எஸ்கேடி தவிர ஏனைய கீட்டோ டயட்டுகளில் கார்போஹைடிரேடின் அளவு மிகவும் குறைக்கப்படுகிறது.

சிறிய வாழைப்பழம் ஒன்றில் 24 கிராம் கார்போஹைடிரேடு இருக்கும். சிறு கிண்ணம் சோற்றில் 45 கிராம் கார்போஹைடிரேடு இருக்கும். கீட்டோ டயட் கடைபிடிப்பவர், குறிக்கப்பட்டதை விட அதிக அளவு கார்போஹைடிரேடு சேர்த்துக் கொண்டால் உடல் மறுபடியும் சர்க்கரையை ஆற்றலுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துவிடும்.

பயனும் ஆபத்தும்

உடல் எடையைக் குறைப்பதற்கு, நீரிழிவு பாதிப்புள்ளோரின் இரத்த சர்க்கரை அளவை கண்காணிப்பதற்கு மற்றும் டிரைகிளிசராய்டுகள் என்னும் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு இம்முறை பயன்படுகிறது. ஆனால், எடை குறைவதற்கு கீட்டோசிஸ் உணவு முறை காரணமாகிறதா அல்லது சர்க்கரை மற்றும் ஒட்டுமொத்த கலோரியை குறைவாக எடுப்பது காரணமாகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று சில உணவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். கீட்டோ உணவு ஒழுங்கு கடைப்பிடிப்பவர்கள், புரதத்தை அதிக அளவு சாப்பிடுவதால் அது திருப்தியாக உணர வைக்கிறது.

உடல், சர்க்கரைக்குப் பதிலாகக் கொழுப்பைப் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது "கீட்டோ ஃப்ளூ" என்ற பாதிப்பு சிலருக்கு வரும். தலைவலி, குமட்டல், அசதி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். பலருக்கு கீட்டோ ஃப்ளூ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இரண்டு வாரங்களில் சரியாகிவிடும். சிலருக்குத் தசைப்பிடிப்பு மற்றும் மூச்சுக் காற்றில் துர்நாற்றம் ஏற்படலாம். தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகிய நார்ச்சத்து கொண்ட உணவுப் பொருள்கள் தவிர்க்கப்படுவதால் மலச்சிக்கலும் ஏற்படலாம்.

கீட்டோ உணவு ஒழுங்கில் பழங்கள், காய்கறிகள் தவிர்க்கப்படுவதால் வைட்டமின் மற்றும் தாது உப்பு குறைபாடு ஏற்படும். இம்முறையில் ஈரல் அதிகமாக வேலை செய்யத் தூண்டப்படுகிறது. ஆகவே, ஈரல் தொடர்பான வியாதிகள், சிறுநீரக கல், எலும்பு தேய்மானம் என்ற பாதிப்புகள் ஏற்படலாம். புரதம் அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயமும் உண்டு.ஆகவே, எந்த முறையாயினும் உங்கள் உடலின் தன்மையை அறிந்து உணவியல் வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி கடைப்பிடிப்பது பாதுகாப்பானது.

You'r reading எடையை குறைப்பதற்கு இதை கடைப்பிடிக்கிறீர்களா? கவனம்! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை