Wednesday, Jul 28, 2021

பெண்களை விட சீக்கிரமாக எடை குறையும் ஆண்கள்! - ஆண்கள் தின வாழ்த்துகள்

by SAM ASIR Nov 19, 2020, 13:07 PM IST

நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. வேறு எந்த சந்தோஷமும் இல்லாவிட்டாலும், பெண்களை விட ஆண்கள் சீக்கிரத்தில் எடை குறையலாம் என்ற தகவல் ஆ.ண்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை. உடல் எடை குறைப்பது எப்படி? என்ற ஆலோசனைகள் இணையம் முழுவதும் குவிந்து கிடக்கின்றன. ஆனால், அத்தனையையும் வாசித்து, அப்படியே கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பலர் ஒவ்வொரு ஆண்டு தொடங்கும்போதும் தினமும் ஜிம்முக்கு செல்வேன் என்று தீர்மானித்து ஒன்று அல்து இரண்டு மாதங்களில் அதை மறந்துபோவதும் உண்டு. பெண்கள் ஓரளவுக்கு தீர்மானத்தை கடைபிடித்தாலும், ஆண்களில் அதிகமாக காணப்படும் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன், பெண்களை விட சீக்கிரமாக எடை குறைவதற்கு ஆண்களுக்கு உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆண்கள் எடை குறைவதற்கான சில வழிகள்..

அலுவலகத்தில் உடற்பயிற்சி
"ஜிம்முக்கு போவதற்கே நேரமில்லை. வீட்டுக்கும் ஆபீஸுக்கும் போய் வரவே நேரம் சரியாகப் போகிறது," என்பதே உடற்பயிற்சி செய்யாததற்கு பலர் கூறும் காரணம். அவ்வளவு சிரமமான வாழ்வியல் முறை கொண்டவர்கள், அலுவலகத்தில் வேலையின் இடையே சற்று இடைவேளை எடுத்து சிறிய பயிற்சிகளை செய்யலாம். உதாரணமாக, லிஃப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக மாடிப்படிகளில் ஏறி இறங்கலாம். பணி நேரத்தில் 3 அல்லது 4 முறை இருக்கையை விட்டு எழுந்து 15 நிமிடம் நடந்துவிட்டு மீண்டும் வந்து அமரலாம். அதை காலை, மதிய உணவுக்குப் பின் என்று பிரித்து செய்யலாம். இரவு உணவு சாப்பிட்ட பின்னரும் சிறிது நேரம் வீட்டுக்குள், பால்கனியில் அல்லது கார் பார்க்கிங்கில் அல்லது தெருவில் நடந்து விட்டு வருவது நலம்.

வார இறுதி நாள்கள்
வாரம் முழுவதும் பரபரவென்று அலுவலகம் சென்று வந்தால், வார இறுதி நாள்களை சந்தோஷமாக கழிப்பது என்பதில் உறுதியாக இருங்கள். அன்று குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். மனதுக்குப் பிடித்த உறவுகள் மற்றும் நண்பர்களோடு பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு மட்டுமல்ல; மனதுக்கும் நல்லதாகும்.

போதுமான உறக்கம்
இருபதுகள் மற்றும் முப்பதுகள் இந்த வயதில் இருக்கும் ஆண்கள், வேலையை தவிர வேறு எதையும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருக்கக்கூடிய வயது இது. ஆகவே உறக்கமறியாமல் உழைப்பர். அது தவறு. போதுமான உறக்கம் இல்லையென்றால் உடல் எடை கூடும். ஒற்றைத் தலைவலி, முதுகு வலி வரக்கூடும். குறைவாக உறங்குபவர்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இது உடல் எடை கூட வழிவகுக்கும். ஆகவே தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.

உங்களையே பேணுங்கள்
பொதுவாக ஆண்கள், மனைவி மற்றும் குழந்தைகள் பேரில் காட்டும் அக்கறையை தங்கள் பேரில் காட்டுவதில்லை. 25 முதல் 35 வயது வரையிலானவர்களுக்கு இந்த பிரச்னை அதிகம். குடும்பத்தை கவனிப்பது நல்ல விஷயம். ஆனால், முடிந்த அளவு நீங்களும் ஒரு நாளை குறித்து ஓய்வெடுப்பது மன அழுத்தத்தை குறைக்கும்.

கொழுப்பு குறைவான புரத உணவு
ஒருவேளை உணவு என்றால் அதில் கால் பங்கு கொழுப்பு குறைவான புரதம் (லீன் புரோட்டீன்) இருப்பது அவசியம். புரதத்திற்கு பசியை அடக்கி, வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, திசுக்கள், தசையை பராமரிக்கும் இயல்பு உண்டு. கோழி இறைச்சி, முட்டை, கொண்டை கடலை, வேர்க்கடலை, முளை கட்டிய பயிறுகள் ஆகியவற்றில் கொழுப்பு குறைவான புரதம் உள்ளதால் அவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்.

நிறைவாக...
கொழுப்பு குறைவான உணவு பொருள்களை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். செய்யக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள். சிப்ஸ், பாப்கார்ன் உள்ளிட்ட பொரித்த தின்பண்டங்களை சாப்பிடுவதற்கு பதிலாக நட்ஸ் என்னும் கொட்டை வகை உணவுகளை சாப்பிட வேண்டும். மூன்று வேளை அதிகமான அளவு சாப்பிடுவதற்கு பதிலாக, ஐந்து வேளையாக பிரித்து சிறிது சிறிதாக சாப்பிட்டால் உடல் எடை குறையும். உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற உங்கள் குறிக்கோள் நிறைவேறட்டும் என்று இந்த ஆண்கள் தினத்தில் வாழ்த்துகிறோம்.

You'r reading பெண்களை விட சீக்கிரமாக எடை குறையும் ஆண்கள்! - ஆண்கள் தின வாழ்த்துகள் Originally posted on The Subeditor Tamil

More Health News

அண்மைய செய்திகள்