குளிர்காலத்தில் இந்தப் பழங்களை சாப்பிட்டால் சருமத்தை பாதுகாக்கலாம்

by SAM ASIR, Nov 21, 2020, 20:26 PM IST

குளிர் காலத்தில் தோல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். உரியச் சத்துகள் நம் உடலில் இருந்தால் இந்த பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். சில பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.

நெல்லி:

அழகுக்கான இயற்கை தயாரிப்புகளில் நெல்லி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுவதன் மூலம் நச்சுகளை அகற்றுகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்படுதல் மூலம் சருமம் மிளிரத் தொடங்கும்.

பப்பாளி

பப்பாய்ன் என்னும் நொதி (என்சைம்) பப்பாளியில் உள்ளது. அது செயல்படாத புரதத்தை உடைக்கிறது. தோலிலுள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகவும் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயல்படுகிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ சத்தும் அதிகம் உள்ளது. பப்பாளி, முதுமை அடையாளத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

அவகோடா

புரதம் மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகம் அடங்கியுள்ளது. குளிர்காலத்தில் சருமம் வறண்டுவிடாமல் இது தடுக்கிறது. தோலை மிருதுவாக காத்து, மிளிரச் செய்கிறது. அவகோடாவிலுள்ள வைட்டமின் இ, தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மாதுளை

சருமத்திற்குப் புத்துயிர் தரக்கூடிய பழம் இது. தோலில் சுருக்கம் விழுவதைக் குறைத்து, வயதான தோற்றத்தைத் தவிர்க்கிறது. குளிர்காலத்தில் தோல் விரிவடையும். மாதுளை தோலின் நுண்துளைகள் இறுக்கமாகக் காக்கிறது.

அன்னாசி

வைட்டமின் சி அதிகம் காணப்படும் பழம் இது. நுண்துளைகள் வெடித்து அதில் மாசு தங்குவதால் பருக்கள் மற்றும் கட்டிகள் ஏற்படுகிறது. அன்னாசிப்பழம் ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகக் கரும்புள்ளிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தோலின் நுண்துளைகள் சுத்தமாக்குகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது வறண்ட சருமத்திற்கு நீர்ச்சத்து அளித்து, ஈரப்பதத்தைக் கூட்டுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் இ மற்றும் சி இரண்டும் சருமத்தை மிளிரச் செய்கின்றன. குளிர்காலத்தில் தோல் மங்கலாகத் தோற்றமளிப்பதை இது தடுக்கிறது.

சீத்தாப்பழம்

வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை சீத்தாப்பழத்தில் உள்ளன. இவை, உடலிலுள்ள ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில்லா அணுக்களுக்கு (ஃப்ரீ ராடிகல்ஸ்) எதிராகச் செயல்படும். சீத்தாப்பழ ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் தோலின் அடுக்குகளில் புதிய செல்கள் உருவாகிறதை ஊக்கப்படுத்தும்.

கிவி

கிவியிலும் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது கொலோஜின் என்ற சருமத்திற்குத் தேவையான புரதத்தை உடல் உற்பத்தி செய்ய உதவுகிறது. தோலுக்கு ஈரப்பதத்தை அளிக்கக்கூடிய வைட்டமின் இ சத்தும் இதில் உள்ளது.

பிளம்

குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பழம் பிளம். இதில் வைட்டமின்கள் பி மற்றும் இ ஆகியவை உள்ளன. மெக்னீசியம், இரும்பு, கால்சியம் (சுண்ணாம்பு சத்து), ஸிங்க் (துத்தநாகம்) ஆகிய தாது உப்புகளும் இப்பழத்தில் உள்ளன. இது உடலைச் சுத்தப்படுத்தி, தோலின் மீளும் தன்மையைப் பராமரிக்கிறது.

You'r reading குளிர்காலத்தில் இந்தப் பழங்களை சாப்பிட்டால் சருமத்தை பாதுகாக்கலாம் Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை